📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 25, 2026 01:04 PM

The Paradise: விமர்சனம்

The Paradise: விமர்சனம்

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் படம் ‘தி பாரடைஸ்’. ‘தசரா’ வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதாலும், நானியின் மிரட்டலான தோற்றம் வரவேற்பை பெற்றதாலும் இப்படத்துக்கு மிகப்பரிய அளவில் முன்பதிவு வசூல் குவிந்தது. ரசிகர்களின் இத்தகைய எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.

80களின் காலகட்டத்தில் பாரடைஸ் என்ற பகுதியில் வாழும் அடையாளமற்ற 'சவாரி' பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அப்பகுதியைத் தனது அளப்பரிய அதிகாரத்தால் கட்டுப்படுத்தி, அந்த மக்களை அடக்கி ஆள்கிறார் மாலிக் (மோகன் பாபு).

இந்த அடக்குமுறைக்கு எதிராக அம்மண்ணிலிருந்து ஒலிக்கும் சில கிளர்ச்சிக் குரல்களில் சம்மக்காவும் ஒருவர். பல ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு ஊர் திரும்பும் சம்மக்காவின் மகன் (நானி), மாலிக்கின் அதிகாரத்தை வீழ்த்தி தன் மக்களுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தர முடிவெடுக்கிறார். அவருடைய நோக்கம் நிறைவேறியதா என்பதே ‘தி பாரடைஸ்’ படத்தின் மீதிக் கதை.

‘கேஜிஎஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீலின் வருகைக்குப் பிறகு ஒரு வித டார்க் டோன், அளவுக்கு அதிகமான ஸ்லோ மோஷன் காட்சிகள், ஹஸ்கி வாய்ஸில் பேசும் கதாபாத்திரங்கள், அந்நியமான வசனங்கள் என ஒரே போன்று எடுக்கப்படும் படங்கள் தென்னிந்திய சினிமாக்களை ஆக்கிரமித்து வருவதை அறிவோம். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த டெக்னிக் கடும் சலிப்பை ஏற்படுத்தி விட்டதும் உண்மை. ‘கேஜிஎஃப்’ நாயகன் யஷ்ஷுக்கே கூட அவர் நடித்த ‘டாக்ஸிக்’ படத்தில் இவையெல்லாம் எடுபடவில்லை. திரைக்கதையில் எந்த மெனக்கெடலும் செய்யாமலும் வெறுமனே இவற்றை மட்டும் படத்தில் வைப்பதில் என்ன பயன்? அந்த வரிசையில் தற்போது ‘தி பாரடைஸ்’ படமும் இணைந்துள்ளது.

வித்தியாசமான களம், கதாபாத்திரங்களின் அறிமுகங்கள், ‘பாரடைஸ்’ உலகத்தின் சூழல் என வழக்கமான வணிக சினிமாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய அனுபவத்தை படத்தின் தொடக்கம் தருகிறது.

தாய்-மகன் இடையேயான பாச உணர்வு, ஹீரோ அறிமுக சண்டை, இடைவேளை காட்சி என முதல் பாதியில் சில காட்சிகள் ஈர்க்கின்றன. சில வசனங்கள் கைகொடுக்கவும் செய்துள்ளன. குறிப்பாக ஆரம்பத்திலேயே ஹீரோவின் கதாபாத்திரம் மற்றும் மாலிக்குடனான மோதலின் பின்னணி தெளிவாக நிறுவப்பட்டு விடுவது ஒரு பெரிய ப்ளஸ்.

ஆனால் இந்த விஷயங்களை தாண்டி மொத்த படத்திலும் பெரிதாக குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமே இல்லாமல் போனது ஆகப்பெரும் சோகம்.

தொடக்கத்தில் கட்டியெழுப்பப்பட்ட உலகமும், கதையின் தீவிரமும் அடுத்தடுத்த காட்சிகளில் அப்படியே நீர்த்துப் போகிறது. உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆடியன்ஸை உள்ளிழுக்காமல், கொடூரமான சண்டைக் காட்சிகளை மட்டுமே இயக்குநர் நம்பியிருப்பது மிகப்பெரிய பலவீனம்.

வில்லனின் நோக்கம் என்ன என்பதை பார்வையாளர்களுக்கு அழுத்தமாக இயக்குநர் சொல்லவில்லை. வில்லன் - ஹீரோ இடையேயான மோதல் மிக மிக சாதாரணமான முறையில் கையாளப்பட்டுள்ளது. ஒரு சக்திவாய்ந்த வில்லனுக்கும் கதாநாயகனுக்கும் இடையிலான மோதல் காட்சி, டெக்னிக்கல் அம்சங்களை தாண்டி எந்த ஒரு விறுவிறுப்பும் இல்லாமல் இருப்பது திரைக்கதையின் சொதப்பலே அன்றி வேறில்லை.

ஆக்‌ஷன் காட்சிகள் என்ற பெயரில் ஏன் இவ்வளவு வன்முறை என்று தெரியவில்லை. சாதாரணமாக காட்டுவதற்கான சாத்தியங்கள் இருந்தும் சில காட்சிகளை வேண்டுமென்றே மிக வன்முறையாகவும், குரூரமாகவும் காட்டியிருக்கிறார் இயக்குநர். அவை அனைத்தும் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைப்பதை தவிர வேறு எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லை.

'அடடே சுந்தரா', 'ஜெர்ஸி', 'ஹாய் நானா' என மென்மையான வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு முக்கியம் கொடுக்கும் நானி இப்படி ஒரு களத்தை தேர்வு செய்தது ஏன் என்று தெரியவில்லை. இருப்பினும் தனது கேரக்டருக்காக அவர் மேற்கொண்ட உடலமைப்பு மாற்றமும், சிகை அலங்காரமும் பாராட்ட வைக்கின்றன.

கயாடு லோஹரின் கதாபாத்திரம் படத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. அவரது கதாபாத்திரம் வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

வில்லனின் மகனாக வரும் இந்தி நடிகர் ராகவ் ஜூயல், தனது கழுத்தில் தடிமனான தங்கச் சங்கிலிகளை அணிந்துகொண்டு நடனமாடுவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. மோகன் பாபுவின் அறிமுகம் தொடக்கத்தில் ஈர்த்தாலும், போகப் போக அவரது கதாபாத்திரம் பலவீனமாக்கப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் ஒளிப்பதிவு ஆகியவை படத்துக்கு மிகப்பெரிய பலம். பாரடைஸ் பகுதியின் பிரம்மாண்டமும், அதன் காட்சி அமைப்புகளும் உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த சில படங்களில் பின்னணி இசையில் ஈர்த்து வந்த அனிருத் கூட இப்படத்தில் காலை வாரி இருக்கிறார். பின்னணி இசை படு இரைச்சல். ‘ஆயா ஷெர்’ பாடல் மட்டுமே ஆறுதல். அரங்கம் அதிர்கிறது. ஆனால் நன்றாக இருக்கிறது என்பதற்காக படத்தில் இத்தனை முறையா பயன்படுத்துவது?

இரண்டாம் பாதியில் கதையை விட கொடூர வன்முறையே பிரதானமாக இருக்கிறது. கைகள், கால்கள், தலைகள் வெட்டப்படும் காட்சிகள் எல்லை மீறுகின்றன. பார்வையாளர்களுக்கு அருவருப்பை மட்டுமே அந்த காட்சிகள் தருகின்றன.

டாரண்டினோ பட பாணியில் கதையை ஏழு அத்தியாயங்களாகப் பிரித்திருந்தாலும், அது திரைக்கதைக்கு எந்த விதத்தில் உதவியுள்ளது என்பது இயக்குநருக்கே வெளிச்சம். இவ்வளவு கொலைகள் நடக்கும் ஒரு ஊரில் காவல்துறையோ, ஊடகங்களோ இல்லையா என்ற கேள்வி எழுகிறது. காக்கைகளின் பின்னணியில் நடக்கும் சண்டை காட்சியெல்லாம் அபத்தத்தின் உச்சம்.

ஏறக்குறைய மூன்று மணி நேரம் ஓடும் இந்தப் படம், எடிட்டிங்கில் குறிப்பாக இரண்டாம் பாதியில் இன்னும் கத்தரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

நானியின் உழைப்பும், முதல் பாதியின் சில சுவாரஸ்யமான காட்சிகளும் பாராட்டுக்குரியவை என்றாலும், அதைத் தாண்டி எந்த ஒரு தாக்கத்தையும் தராத இந்தப் படம் இந்த ஆண்டின் மோசமான படங்களில் ஒன்றாக இணைகிறது.