போட்டித்தன்மைமிக்க சமூகத்திற்கும் முழுமையான வளர்ச்சிக்குமிடையே சிக்கித்தவிக்கும் பெற்றோர், சிங்கப்பூர் செய்திகள்
இன்றைய பெற்றோர் பலர் பிள்ளைகளின் முழுமையான வளர்ச்சியை முன்னிலைப்படுத்த முற்பட்டாலும், போட்டித்தன்மைமிக்க சமூகம் அம்முயற்சியைப் பெற்றோர்க்குச் சவாலானதாக மாற்றுகிறது என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
கொள்கை ஆய்வுக் கழகம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) வெளியிட்ட ஆய்வு முடிவில் பெற்றோர் பலர் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியையும் முழுமையான வளர்ச்சியையும் ஒரே நேரத்தில் திறம்படக் கையாளச் சிரமப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்ற ஆய்வு 2016ஆம் ஆண்டு செய்யப்பட்டபோது பெற்றோர் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டனர். அண்மைய ஆய்விலும் அதே வகைப்பாடு தொடர்ந்தது.
‘லவ்விங் லயன்ஸ்’, ‘நியூ ஸ்கூல் பேரன்ட்ஸ்’, ‘டிடெச்ட் ரியலிஸ்ட்ஸ்’ என்ற மூன்று பிரிவுகளாக பெற்றோர் வகைப்படுத்தப்பட்டனர்.
ஆய்வில் பங்கெடுத்த பெற்றோர் 1,500 பேரில் 40.8 விழுக்காட்டினர் (2016ல் 37.5%), பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியையும் முழுமையான வளர்ச்சியையும் சமமாக உயர்த்த முயல்வதால் ஆக அதிக மனவுளைச்சலுடன் ‘லவ்விங் லயன்ஸ்’ என்று வகைப்படுத்தப்பட்டனர்.
இவ்வகைப் பெற்றோர் துணைப்பாட வகுப்புகளுக்குச் சராசரியாக மாதம் $743 செலவிடுகின்றனர். மூவகைப் பெற்றோரிலும் இதற்கு ஆக அதிகம் செலவிடுவோர் இந்தப் பிரிவினரே.
‘நியூ ஸ்கூல் பேரன்ட்ஸ்’ வகையைச் சேர்ந்த 34.3 விழுக்காட்டுப் (2016ல் 33.9%) பெற்றோர் முழுமையான வளர்ச்சியை முதன்மையாகக் கருதுவதால் குறைந்த மனவுளைச்சலைப் பதிவு செய்திருந்தாலும் செறிவூட்டல் திட்டங்களுக்காக ஆக அதிகமாகச் செலவு செய்திருந்தனர்.
எஞ்சியிருக்கும் 24.9 விழுக்காட்டு ‘டிடெச்ட் ரியலிஸ்ட்ஸ்’ (2016ல் ‘ஓல்ட் ஸ்கூல் பேரன்ட்ஸ்’, 28.6%) வகைப் பெற்றோர் பிள்ளைகளின் கல்விப் பயணத்தில் நடைமுறைக்குரிய திட்டத்தைப் பின்பற்றுகின்றனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் ஓரறை முதல் மூவறை வரையிலான வீடுகளில் வசிக்கும் 77.8 விழுக்காட்டுப் பெற்றோருக்குத் தங்கள் பிள்ளைகள் கல்வியில் பின்தங்கிவிடுவரோ என்ற அச்சம் அதிகம் இருப்பதாகவும் அவர்களுள் 92.4 விழுக்காட்டினர் தொடக்கநிலை இறுதித் தேர்வை ஆதரிப்பதாகவும் கண்டறியப்பட்டது.
அப்பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சராசரியாக வாரத்திற்கு 2.53 மணி நேரம் துணைப்பாட, செறிவூட்டல் வகுப்புகளுக்கு அனுப்புகின்றனர். தனியார் வீடுகளில் வசிக்கும் பெற்றோரைப் பொறுத்தவரை இது சராசரியாக 4.29 மணி முதல் 5.01 மணி நேரமாக உள்ளது.
வெற்றி என்பதற்கான பரந்த அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதற்கேற்பப் பெற்றோரும் கல்விமுறையும் தங்களை மாற்றிக்கொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்வுகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் சீர்திருத்தங்கள் மன அழுத்தத்தைத் தற்காலிகமாகச் சற்றுக் குறைத்தாலும், கடுமையான போட்டி நிறைந்த வேலைவாய்ப்புச் சந்தையும் சமூக-பொருளியல் காரணிகளுமே பெற்றோரின் நீண்டகாலக் கவலைகளுக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
மாணவர்களின் பின்னணி எதுவாக இருந்தாலும், அவர்கள் வகுப்பறைக்குள்ளும் அப்பாலும் வளர்ச்சி பெறச் சமமான வாய்ப்புகளை வழங்கவேண்டும்; கல்விச் சாதனைகளைக் கடந்து பிள்ளைகளின் முழுமையான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பெற்றோரின் மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதே இனி செய்ய வேண்டிய முக்கியப் பணியென்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.