📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 09, 2026 11:00 PM

பரந்தாமனுக்கு பின்னால் உதய்? இடைத்தேர்தலை புறக்கணிக்கும் மனநிலையில் இருந்ததா திமுக?

பரந்தாமனுக்கு பின்னால் உதய்? இடைத்தேர்தலை புறக்கணிக்கும் மனநிலையில் இருந்ததா திமுக?

பரந்தாமனுக்கு பின்னால் உதய்? இடைத்தேர்தலை புறக்கணிக்கும் மனநிலையில் இருந்ததா திமுக?

இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுகவில் ஆலோசனை நடந்ததாக கூறப்படும் நிலையில், உதயநிதியின் தலையீட்டால் முடிவு மாற்றப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில், திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதிக்கு வழக்கறிஞர் ஐ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதிக்கு வழக்கறிஞர் எஸ்.சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், ஆரம்ப கட்டத்தில் இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமா அல்லது புறக்கணிக்க வேண்டுமா என்ற ஆலோசனை திமுகவுக்குள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவில் நிலவிய தயக்கம் :

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளும் கடந்த காலங்களில் அதிமுகவின் செல்வாக்கு இருந்த பகுதிகள் என்பதால், அங்கு நேரடியாக களமிறங்குவது குறித்து கட்சிக்குள் சில தயக்கங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு இன்னும் குறையவில்லை என்பதால், ஒரு தொகுதியில் கூட தோல்வி ஏற்பட்டால் அது அரசியல் ரீதியாக எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தும் சில நிர்வாகிகள் மத்தியில் நிலவியதாக கூறப்படுகிறது.

இதனால், இடைத்தேர்தலை புறக்கணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது ஒரு பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மதுராந்தகம் தொகுதியில் 3வது இடத்தையும் , தாராபுரம் தொகுதியில் 2வது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்விகளின் காரணத்தினால்தான் தேர்தலை புறக்கணிக்க ஆலோசித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது எதற்காக முந்திக்கொண்டு முதல் ஆளாய் அறிவித்துள்ளது என்று அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தபோது, இதற்கு பின்னால் உதயநிதி இருப்பதாக உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

"பயந்து ஓடிவிட்டோம் என விமர்சிப்பார்கள்" - உதயநிதி எதிர்ப்பு :

வேட்பாளர்கள் அறிவிக்கும் முன்னால் அறிவாலயத்தில் உதயநிதி நடத்திய ஆலோசனைகள் குறித்து தகவல்கள் கசிந்து உள்ளன.

அதாவது தேர்தலை புறக்கணித்தால் அது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் திமுக பயந்து பின்வாங்கிவிட்டது என்ற விமர்சனம் உருவாகும் என்றும் உதயநிதி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இடைத்தேர்தலை முழு பலத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டதாகவும், இரண்டு தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்வது தனது பொறுப்பு என உதயநிதி தலைமையிடம் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது .

வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் முக்கிய பங்கு?

இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்விலும் உதயநிதி ஸ்டாலின் முக்கிய பங்கு வகித்ததாக திமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மதுராந்தகம் தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இறுதியாக வழக்கறிஞர் ஐ.பரந்தாமனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஐ.பரந்தாமன்?

மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் ஐ.பரந்தாமன், திமுக சட்டத்துறையில் மாநில இணைச் செயலாளராக உள்ளார்.

வழக்கறிஞரான இவர், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் திமுகவின் கருத்துகளை தொடர்ந்து முன்வைத்து வந்தவர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் எழும்பூர் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதற்கு முன்பு 2016 தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார்.

மீண்டும் கிடைத்த வாய்ப்பு :

கடந்த சட்டமன்ற தேர்தலில் எழும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட ஐ.பரந்தாமன் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தொகுதிக்கு எந்தவொரு நலத்திட்டங்களை செய்யவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியதாகவும், இவர் மேல் மக்களுக்கு நல்ல அபிப்ரயம் இல்லை என்பதாலும் அவருக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்காமல் போனதற்கு காரணம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தது.

மீண்டும் அவரை எழும்பூர் தொகுதியில் நிற்க வைத்தால் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற காரணத்தினால்தான் அவருக்கு சீட் கொடுக்க தலைமை மறுத்ததாக கூறப்படுகிறது.

அதன்பின், திமுக உறுப்பினர், வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா எழும்பூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார்.

தற்போது மதுராந்தகம் இடைத்தேர்தல் மூலம் மீண்டும் தேர்தல் களத்தில் இறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

அமைச்சர் நிர்மல் குமாரை கடுமையாக விமர்சித்த பரந்தாமன், இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் சட்டமன்றத்தில் நிர்மல் vs பரந்தாமன் என்ற நிலைமை மாறுமா என்பது அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

தாராபுரம் வேட்பாளர் சுகன்யா :

தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் எஸ்.சுகன்யா, வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். திமுகவில் ஒன்றிய அணி செயலாளராக உள்ள இவர், அந்த தொகுதியை சேர்ந்தவர்.

உள்ளூர் கட்சி அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த இவர், கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தாராபுரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அப்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தற்போது இடைத்தேர்தல் வாய்ப்பு மூலம் திமுக சார்பில் அவர் களம் இறக்கப்பட்டுள்ளார்.

இடைத்தேர்தல் களத்தில் திமுகவின் புதிய வியூகம் :

இடைத்தேர்தலை தவிர்க்காமல் நேரடியாக சந்திக்கும் முடிவை திமுக எடுத்துள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வெற்றி பெற கட்சி முழு வீச்சில் களப்பணிகளை தொடங்கியுள்ளது.

உதயநிதியின் நேரடி தலையீட்டுக்கு பிறகே வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த இரண்டு தொகுதிகளின் முடிவு தமிழக அரசியல் களத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.