📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 26, 2026 08:04 AM

பரந்தூர் விமான நிலையம் திட்டம் ரியல் எஸ்டேட்டுக்காக உருவாக்கப்பட்டது: ஆதவ், நிர்மல், கீர்த்தனா குற்றச்சாட்டு

பரந்தூர் விமான நிலையம் திட்டம் ரியல் எஸ்டேட்டுக்காக உருவாக்கப்பட்டது: ஆதவ், நிர்மல், கீர்த்தனா குற்றச்சாட்டு

சென்னை: ‘ரியல் எஸ்டேட்டுக்காக உருவாக்கப்பட்டதுதான் பரந்தூர் விமான நிலையம் திட்டம்’ என்று சட்டப்பேரவையில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், கீர்த்தனா ஆகியோர் குற்றம்சாட்டினர்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொழில், இயற்கை வளம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம் வருமாறு:

ஆஸ்டின் (திமுக): பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை முதல்வர் ரத்து செய்துள்ளார். முதலீட்டை ஈர்க்க, அத்திட்டம் முக்கியமானதாக இருந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: பரந்தூர் விமான நிலையமா, விவசாயிகளின் கண்ணீரா என்றால், எங்கள் தலைவர், விவசாயிகளின் கண்ணீர் பக்கம்தான் நிற்பார்.

புதிய விமான நிலையத்துக்கான இடம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த விமான நிலையம் இல்லையென்றால் தமிழகத்தின் முதலீடு போய்விடும் என்று திமுகவினர் சொல் கின்றனர்.

முதலீடும், தொழிற்சாலையும் வருவதற்கு முக்கியமான காரணம் ஊழல் இல்லாத முதல்வர், அமைச்சர், அரசாங்கம். முதலீடு செய்ய வருபவர்களுக்கு 45 நாட்களில் அனைத்து துறைகளிலும் முதல்வர் அனுமதி வாங்கி தருகிறார்.

ஆரம்பத்தில் பரந்தூர் விமான நிலையம் திட்டம் குறித்து அரசுக்கு மட்டுமே தெரியும். ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள், அந்த இடத்தைச் சுற்றி நிலத்தை வாங்கியுள்ளனர். ரியல் எஸ்டேட் மோசடி நடந்துள்ளது. பரந்தூர் விமான நிலையம் உருவாக்கப் பட்டதே, இந்த ரியல் எஸ்டேட் மோசடிக்காகத்தான்.

முன்னாள் முதல்வர் பழனிசாமி: பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட் டுள்ளது. நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்?

சட்டத்துறை அமைச்சர்நிர்மல் குமார்: விவசாயிகளுக் காக மட்டும்தான் பரந்தூர் விமானநிலையம் திட்டத்தை முதல்வர் ரத்து செய்துள்ளார். எடுக்கப்பட்ட நிலம் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார்.

விமான நிலையம் ரத்து செய்யப்பட்டதால் அதிகம் கவலைப்பட்டு கதறுபவர்கள், ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைதான். கருப்பு பணத்தை முதலீடு செய்தவர்கள்தான்.

தங்கம் தென்னரசு (திமுக): ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று சொல்கிறீர்கள். எந்த லாட்டரி மருமகனுக்கு புதிய விமான நிலையத்தை கொண்டு வருகிறீர்கள் என்று நான் கேட்கலாமா? நீங்கள் விமான நிலையத்துக்கு வேறு இடம் பார்த்தாலும், அங்கும் விவசாய நிலமும், இதே பிரச்சினையும் இருக்கும்.

எப்போது விமான நிலையம் கொண்டு வருவீர்கள். பரந்தூர் விமான நிலையத்தை கைவிடுவது தமிழகத்தின் பொருளாதாரத்துக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன்: ஆயிரம் ஆண்டுகால கம்பன் கால்வாய் என்ற தொல்லியல் பொக்கிஷம் பரந்தூரில் உள்ளது. இன்னொரு கால்வாயை உருவாக்க முடியுமா? பரந்தூர் ஒரு உறிஞ்சி நிலம்.

சென்னைக்கு வெள்ளம் வருவதைத் தடுக்கிறது. இன்னொரு வெள்ளத்தை சென்னை தாங்குமா? பரந்தூரில் கிரீன் ஏர்போர்ட்கட்ட முடியாது. வாட்டர் ஏர்போர்ட் கட்டி மிதந்து போகலாம்.

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா: பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மாற்று திட்டங்களுக்கு செயல்படுத்தப்படும். இதனால், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு: பரந்தூர் விமான நிலைய திட்டம், அப்பகுதி கிராமங்களின் வளர்ச்சிக்கு எதிரானது. திமுக கூட்டணியில் இருந்தபோதும், அன்றைய முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தோம். அந்த பகுதி ஒரு சிறை வைக்கப்பட்டதுபோல் இருந்தது. முதல்வரின் அறிவிப்பால், அப்பகுதி மக்கள் விடுதலை அடைந்துள்ளனர்.

அமைச்சர் கீர்த்தனா: பரந்தூரில் ரியல் எஸ்டேட் மிகப் பெரிய அளவில் உள்ளது. அந்த அளவுக்கு அவர்கள் இடத்தை வாங்கி போட்டுள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி (அதிமுக): கோவை மாவட்டத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் ஆயிரம் ஏக்கர் நிலத்தை எடுத்து, மலையை உடைத்துள்ளனர். அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். மான்கள், சிறுத்தை, புலி கொல்லப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போஜராஜன் (பாஜக): மத்திய அரசைப் பொறுத்தவரை, மாநில அரசின் தொழில் வளர்ச்சி தான் முக்கியம். மாநில அரசு கொடுத்த பரிந்துரைக்கு மத்திய அரசு முடிவு எடுக்கிறது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மாற்று திட்டத்தை உடனே எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும், பரந்தூர் விமான நிலையம் திட்டம் ரத்து செய்வதாக முதல்வர் அறிவித்ததைப் பாராட்டி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) செல்லசுவாமி (மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட்), தாரகை கத்பர்ட் (காங்கிரஸ்) ஆகியோரும் பேசினர்.