திமுகவின் 110 புதிய மாவட்டங்கள் பட்டியல் தயார்: விரைவில் வெளியிட கட்சித் தலைமை திட்டம்
சென்னை: சமீபத்தில் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 110 மாவட்டங்கள் எது என்பது குறித்த பட்டியலை விரைவில் வெளியிடதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியதை அடுத்து, உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் சமீபத்தில் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் ‘திமுக மாவட்டங்களின் எண்ணிக்கை 110-ஆக அதிகரிக்கப்படும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் தற்போது கட்சி தலைமை விரைவில் 110 மாவட்டங்கள் பட்டியலை வெளியிட தீவிரமாகி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து அறிவாலய வட்டாரங்கள் கூறியதாவது: செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் 110 மாவட்டங்கள் குறித்த பட்டியல் தயாரித்து முடிக்கப்பட்டுவிட்டது. உட்கட்சித் தேர்தல் அடிப்படையில் தான் அங்கெல்லாம் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள். இதற்கு வசதியாக முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பொறுப்பாளர் வீதம் புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், ‘இப்படி பொறுப்பாளர்கள் நியமனம் நடந்தால், அவர்கள் அடுத்து வரும் உட்கட்சி தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவதற்கான பணிகளை முடுக்கிவிடுவார்கள்; அப்போது உட்கட்சி தேர்தல் ஜனநாயக ரீதியிலும் நியாயமான முறையிலும் நடப்பதில் சிக்கல் ஏற்படும்’ என கட்சித் தலைமைக்கு மூத்த நிர்வாகிகள் ஆலோசனை தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தற்போது பொறுப்பாளர்கள் பட்டியலை அறிவிக்கும் முடிவைத் தள்ளி வைத்துள்ளார். இதனாலேயே பொறுப்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விரைவில் 110 மாவட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலை கட்சித் தலைமை வெளியிடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.