📅 Monday, 03 August 2026 IST | ஆடி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 03, 2026 03:30 AM

படிக்க, சிறக்க: மறதியால் வந்த பாடம்

படிக்க, சிறக்க: மறதியால் வந்த பாடம்

தொடக்கநிலை நான்கில் பயிலும் கதிர், படைப்பாற்றல் நிறைந்த மாணவன். எழுத்தாற்றல் நிறைந்த கதிருக்குக் கதை, கட்டுரை போன்றவற்றை நன்றாகப் புனையும் திறன் உண்டு.

ஆனால், அவன் அடிக்கடி பாடப்புத்தகங்களை மறந்துவிடுவான். ஆசிரியர் வீட்டுப்பாடங்களைப் பற்றிச் சொல்லும்போது சில நேரங்களில் கவனித்துக் குறிப்பதே இல்லை.

ஒருமுறை, யுனிவர்சல் ஸ்டூடியோஸ் சிங்கப்பூர் கேளிக்கைப் பூங்காவுக்குச் செல்லப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

பள்ளித் தேர்வு முடிந்து ஆண்டிறுதியில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்காக மாணவர்களுக்கு இந்தச் சுற்றுலா திட்டமிடப்பட்டிருந்தது.

“நீங்கள் ஒருவரோடு ஒருவர் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காக இந்தச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான அனுமதிக் கடிதத்தில் உங்கள் பெற்றோர் கையெழுத்திட வேண்டும். சுற்றுலாவுக்கு இன்னும் மூன்று நாள்களே உள்ளன. எனவே, இதனை மறக்காமல் கொண்டுவர வேண்டும்,” எனக் கதிரின் வகுப்பாசிரியர் கூறினார்.

ஆசிரியர் இதனைச் சொன்னபோது கதிர் கவனிக்கவில்லை. அனுமதிக் கடிதத்தை எடுத்துத் தனது பையில் போட்டுவிட்டு அதனைப் பற்றி முற்றிலும் மறந்துவிட்டான்.

வெள்ளிக்கிழமை வந்தது. வகுப்பின் இறுதியில் அனுமதிக் கடிதத்தைத் தரும்படி ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் கேட்டார்.

கதிருக்குத் தூக்கி வாரிப் போட்டது. உடனே அவன், “ஆசிரியர், நான் நாளைக்குக் கொண்டு வருகிறேன்,” என்று கூறினான். ஆசிரியர் அவனை வருத்தத்துடன் பார்த்து, “பெற்றோரின் கையெழுத்துள்ள அனுமதிக் கடிதம் இல்லாவிட்டால் நீ இந்தப் பயணத்தில் பங்கேற்க முடியாது,” என உருக்கமாகத் தெரிவித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அதிர்ச்சியடைந்த கதிர், “தயவு செய்து எனக்காக ஒரு வாய்ப்பு தாருங்கள்,” எனக் கெஞ்சினான்.

ஆசிரியர் அதற்குச் சம்மதிக்கவில்லை. “பள்ளி விதிமுறையை என்னால் மாற்ற முடியாது. நீ நல்ல மாணவன். ஆனால், விதிமுறைகள் எல்லாருக்கும் பொதுவானது. விதிமுறைகளுக்கு எல்லாரும் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கதிர் கண்கலங்கினான். அவன் கலங்குவதைக் கண்ட மற்ற மாணவர்களும் என்ன செய்வதென்று அறியாது அமைதியாக இருந்தனர்.

மறதியை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டதாகக் கதிர் அப்போதுதான் உணர்ந்தான். தனது மறதியால் சுற்றுலா செல்லும் வாய்ப்பை இழந்தான். மறுநாள் கதிர் வீட்டிலிருந்தபடியே தனது பொழுதைக் கழித்தான்.

இருந்தாலும், இந்தச் சோகத்தில் கதிரின் மனத்தில் தெளிவும் உறுதியும் பிறந்தன. எண்ணங்களையும் செயல்களையும் கட்டுக்கோப்புடன் வைத்தால் மறதி எளிதில் தொற்றிக்கொள்ளாது என்பதைத் தனது வேதனையிலிருந்து புரிந்துகொண்டான்.

வீட்டுப்பாடங்கள், இணைப்பாட நடவடிக்கைகள் என என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் கதிர் கண்ணும் கருத்துமாகக் குறிப்பெடுத்துக்கொண்டான்.

மனத்தை அடிக்கடி அலையவிடாமல் சுற்றி நடப்பவற்றின் மீது கவனம் செலுத்தத் தொடங்கினான். உறுதியுடன் இந்த முயற்சியைத் தொடர்ந்த கதிரின் வாழ்க்கை மீண்டும் மலரத் தொடங்கியது.