📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 22, 2026 06:32 PM

படித்தது தமிழ் மீடியம்; ஜெயித்தது ஜப்பானில்: ஆண்டிற்கு ரூ.10 கோடி டர்ன் ஓவருடன் 3 ஸ்டார்ட்

படித்தது தமிழ் மீடியம்; ஜெயித்தது ஜப்பானில்: ஆண்டிற்கு ரூ.10 கோடி டர்ன் ஓவருடன் 3 ஸ்டார்ட்

தமிழ்நாட்டின் தென்பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில், சிறிய கிராமத்தில் பிறந்து, தமிழ் மீடியத்தில் படித்த பெண், தற்போது ஜப்பானில் வெற்றிகரமாக ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்றால் கேட்பதற்கே வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறதல்லவா.. ஆம், அந்த வெற்றிப்பெண் தான் விஜயலட்சுமி கருப்பசாமி.

தற்போது ஜப்பானில் வசித்து வரும் அவர், FOX Academy என்ற AI எட்டெக் (EdTech) நிறுவனத்தையும், FOX Ventures என்ற நிறுவனத்தையும் நிறுவி அதன் தலைமை செயல் அதிகாரியாக (CEO) செயல்பட்டு வருகிறார். அதோடு தற்போது 'கிமாரா' என்ற பேஷன் இணையதளத்தையும் அவர் நிறுவியுள்ளார்.

யுவர்ஸ்டோரி தமிழுக்காக நாம் விஜயலட்சுமியை அணுகியபோது, ஜப்பானில் இருந்தபடியே ஆன்லைனில் நமக்கு அவர் பேட்டியளித்தார். அவரது ஒவ்வொரு வார்த்தைகளுமே, சாதிக்கத் துடிப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும், என்ன தொழில் செய்யப் போகிறோம், என குழப்பத்தில் இருப்பவர்களுக்கு தெள்வு கொடுப்பதாகவும் உள்ளது.

தூத்துக்குடி பெண்

தூத்துக்குடி அருகே சிறு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள்தான் நான். அப்பா வாழைத் தோட்டம் வைத்துள்ளார். அம்மா பால்வாடி டீச்சர். நான் 12ம் வகுப்பு வரை அருகில் இருந்த அரசு பள்ளியில் படித்தேன். பள்ளிக்குச் செல்வது, அப்பாவுடன் வெளியில் செல்வது, வார இறுதிநாட்களில் வாழை படத்தில் காட்டுவதுபோல, வாழைத்தோட்டத்தில் வேலைக்குச் செல்வதும், என எனது உலகம் ரொம்பவே சின்னதாக, அழகாக இருந்தது.

விளையாட்டு, படிப்பு, நடிப்பு, என பள்ளியில் ஆல்ரவுண்டராக இருந்த விஜயலட்சுமிக்கு, முதன்முறையாக ரயிலில் பயணம் செய்யும் அனுபவமே, அவர் கல்லூரிக்காக கோவைக்கு சென்றபோதுதான் அமைந்தது.

அந்த சமயத்தில் மீண்டும் விளையாட்டுதான் அவருக்கு கை கொடுத்தது. விளையாட்டுப் போட்டிகளில் கிடைத்த வெற்றி மூலம் கல்லூரியில் தனக்கான அடையாளத்தை பெற்றார். சிறு வயதில் இருந்தே ஒரு தொழில்முனைவோராக மாற வேண்டும் என்பதுதான் அவரது கனவாக எப்போதும் எழுந்துள்ளது.

விளக்குமாறு விற்று முதல் வருமானம்

அப்பாவுடனேயே எல்லா இடங்களுக்கும் சென்றதால், வியாபாரம், வரவு செலவு என தொழில் அறிவு விஜயலட்சுமிக்கு இயற்கையாகவே உண்டானது. சிறுவயதில் இருந்தே எப்படியாவது தன் செலவுகளுக்காவது வீட்டில் பணம் எதிர்பார்க்காமல் சம்பாதிக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் இருந்துள்ளார்.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல, சிறுவயதில் இருந்தே தொழில் மீது அவர் காட்டிய ஆர்வம்தான் அவரை இன்று ஜப்பானில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. கல்லூரி படிப்பு முடித்ததுமே, எங்கு வேலைக்குச் செல்லலாம், என தேடாமல், நாமே பலருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என விஜயலட்சுமி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

எனது கம்பெனியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வங்கிகளுக்கு அலைந்தேன். பல வங்கிகள் என் புராஜெக்ட்டை ரிஜெக்ட் செய்தபோது, என் மேல் நம்பிக்கை வைத்து, ஐஓபியில் ரூ.3 லட்சம் லோன் கிடைத்தது. அந்தப் பணத்தை வைத்து எனது நிறுவனத்தை விரிவு படுத்தினேன்.

தனது குழுவினருடன் விஜயலட்சுமி

விஜயலட்சுமி எடுத்த முக்கிய முடிவு!

கல்லூரிப் படிப்பு முடித்து, நிறுவனம் ஆரம்பித்து விட்ட போதும், எனது ஆங்கிலத் தயக்கம் அப்படியேதான் இருந்தது. என்னை பயமுறுத்தும் விசயங்களை நேரடியாக மோதி, அதில் வெற்றி காண்பது எனக்கு ரொம்பவே பிடிக்கும். எனவே, பெங்களூரு செல்ல முடிவெடுத்தேன். அதோடு, நான் தூத்துக்குடியிலேயே இருந்து விட்டால், எனது நிறுவனத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாது என்பதாலும் இந்த முடிவை நான் எடுத்தேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளில் இதுவும் ஒன்று, என தொழில்ரீதியாக தான் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த கதையை விவரிக்கிறார் விஜயலட்சுமி.

எனர்ஜி ஆடிட்டிங் கம்பெனியில் 5 வருடம் தனக்குக் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு, இலவசமாக பெங்களூருவில் ஓர்க்‌ஷாப்களை நடத்தத் தொடங்கியுள்ளார் விஜயலட்சுமி. ஒரு தொழிலை எப்படித் திட்டமிட வேண்டும், அதற்காக வங்கியை எப்படி அணுக வேண்டும், ஆடிட்டிங் பற்றிய அறிவு என மாணவர்களுக்கு இலவசமாக அந்த ஒர்க்‌ஷாப்பில் அவர் கற்றுக் கொடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் இதனை நான் இந்திய மாணவர்களுக்காகத்தான் ஆரம்பித்தேன். ஆனால், எங்களது பயிற்சியைப் பற்றி தெரிந்து கொண்ட ஜப்பான் பல்கலைக்கழகம் ஒன்று அவர்களது மாணவர்களை எங்களிடம் பயிற்சிக்காக அனுப்பியது. இதுதான் ஜப்பானுக்கும் எங்களது நிறுவனத்திற்கு தொடர்பு ஏற்படுத்திய தொடக்கப்புள்ளி, என இந்தியாவில் இருந்த தனது நிறுவனம் ஜப்பான் ஸ்டார்ட் அப் ஆக மாறிய கதையைக் கூறுகிறார் விஜயலட்சுமி.

தேடி வந்த ஜப்பான் வாய்ப்பு

ஜப்பான் பல்கலைக்கழக மாணவர்களையும், இந்திய மாணவர்களையும் இணைத்து விஜயலட்சுமி நடத்திய ஒர்க்‌ஷாப் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. இந்த சமயத்தில் கோவிட் லாக்டவுனும் வர, அனைத்தும் ஆன்லைனுக்கு மாறியதில், மேலும் பல ஜப்பானிய மாணவர்கள் ஃபாக்ஸ் அகாடமியில் சேர்ந்து கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆன்லைனிலேயே ஜப்பான் மாணவர்களுக்கான வகுப்புகளை நாங்கள் எடுத்தோம். எங்கள் வகுப்புகளில் அவர்களுக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்து, எனது நிறுவனத்தை ஜப்பானிற்கே கொண்டு சென்றால் என்ன என்ற திட்டம் உருவானது. லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் 2022ம் ஆண்டு முதன்முறையாக நான் ஜப்பான் சென்றேன். அங்கு எனது நிறுவனத்திற்கான சூழல் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்.

பெற்றோருடன் விஜயலட்சுமி

அப்போதுதான், ஜப்பானின் ஸ்டார்ட் அப் விசா பற்றித் தெரிந்து கொண்டேன். டூரிஸ்ட் விசாவில் ஜப்பானில் இருந்து கொண்டே, ஸ்டார்ட் அப் விசாவைப் பெற்றேன். இந்த விசாவைப் பெற்ற முதல் தென்னிந்தியர் நான் தான். ஜப்பானின் கொகெய்டோவில் உள்ள சபோரோ நகரில்தான் தற்போது வசித்து வருகிறார் விஜயலட்சுமி.

இதுதான் எனது முக்கிய மார்க்கெட் எனத் தெரிந்து கொண்டவுடன், ஜப்பானில் வாழ்வதற்கான ஆயத்தப் பணிகளை நான் மேற்கொள்ளத் தொடங்கினேன். ஏனென்றால், அங்கு வருடத்தின் ஆறு மாதங்கள் உரை பனி இருக்கும். அதுவரை பனியையே பார்த்திராத எனக்கு, அந்த இடத்தில் வாழ்வதற்கு மனதையும், உடலையும் தயார் படுத்திக் கொண்டேன்.

ரூ. 50 லட்சம் முதலீடு.. ரூ. 10 கோடி டர்ன் ஓவர்

ஃபாக்ஸ் நிறுவனம் தனக்கான அங்கீகாரத்தை அங்கு பெற்றதும், அடுத்தகட்டமாக ஃபாக்ஸ் வென்ச்சர்ஸ் (FOX Ventures) நிறுவனத்தை நிறுவினார் விஜயலட்சுமி. சிங்கப்பூர் இன்வெஸ்டர்கள் மூலம் ரூ.50 லட்சத்தை இந்நிறுவனத்தில் அவர் முதலீடு செய்துள்ளார்.

விஜயலட்சுமியிடம் தற்போது 12 ஊழியர்கள், 10 இண்டர்ன்கள் மற்றும் காண்ட்ராக்ட் மெம்பர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மனிதர்களைப் படிக்க வேண்டும் என அடிக்கடி என் அப்பா கூறுவார். அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட அந்த நல்ல பழக்கம்தான் ஜப்பான் மக்களிடையே என் மீதான நம்பிக்கையை உருவாக்கியது. இந்திய மாணவர்களுக்காக உருவாக்கிய எங்கள் பாடத்திட்டங்களை, ஜப்பான் மாணவர்களுக்காக கொஞ்சம் மாற்றினோம். 150 மில்லியன் மார்க்கெட் ஜப்பானில் உள்ளது. தற்போது வெப்சைட் வாயிலாக ரெக்கார்டட் கோர்ஸ்களாக நாங்கள் சேவை வழங்கி வருகிறோம்.

பிரவுன் ஸ்கின் பெண்களுக்கான பேஷன் பிராண்ட்

ஃபாக்ஸ் அகாடமி, ஃபாக்ஸ் வென்ஞ்சர்ஸ் மட்டுமின்றி தற்போது ’கிமாரா’ என்ற புதிய நிறுவனத்தோடு பேஷன் மார்க்கெட்டிலும் களமிறங்கியிருக்கிறார் விஜயலட்சுமி. ஏற்கனவே மாடலிங் செய்து வரும் அவர், ஜப்பானியர்களின் பாரம்பரிய உடையான கிமானோவை இந்தியர்களுக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்து, அதனை ஆன்லைனில் விற்பனை செய்ய இருக்கிறார்.

ஆள் பாதி ஆடை பாதி என்பது 100 சதவீதம் உண்மை. பார்ப்பதற்கு நல்ல மற்றும் அணிவதற்கு வசதியான உடையைப் போன்ற தன்னம்பிக்கையை வேறெதுவும் தந்துவிட முடியாது. என்னை நானே செதுக்கிக் கொண்டதில் என் ஆடைகளுக்கும் முக்கியப் பங்குண்டு. உடைகள் மூலம் நான் பெற்ற அந்த தன்னம்பிக்கையை எங்கள் ஊர் பெண்களுக்கும் கொண்டு சேர்க்க விரும்புகிறேன், என்கிறார் விஜயலட்சுமி.

தனது நிறுவனத்திற்கு ஃபாக்ஸ் என நரி பெயர் வைத்ததன் பின்னணியிலும் சுவாரஸ்யமான கதை ஒன்றை வைத்திருக்கிறார் விஜயலட்சுமி.

ஆனால், இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், ஜப்பானில் நரியை கடவுளாக வழிபடுவார்கள். நரிக்கென தனியே கோவில்கள்கூட உண்டு. எனவே, என் நிறுவனத்தின் பெயரும் இங்கு பிரபலமாகி விட்டது, என மகிழ்ச்சியோடு கூறுகிறார் விஜயலட்சுமி.

உயர்ந்த கனவுகள் காணுங்கள்!

ஜப்பான் போன்ற அயல்நாட்டிற்கு சுற்றுலா செல்வதே பலருக்கும் இங்கு கனவாக உள்ள நிலையில், அங்கு சென்று ஸ்டார்ட் அப் தொடங்கி, அதனை வெற்றிகரமாக நடத்தி வருவதோடு, குறுகிய காலகட்டத்திலேயே தொழிலில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து வரும் விஜயலட்சுமி, நிச்சயம் வாழ்க்கையில் உயர நினைப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டி என்றால் மிகையில்லை.