படப்பிடிப்பே இன்னும் தொடங்கல... அதுக்குள்ள இத்தனை கோடி வியாபாரமா?
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள 'டேர் டெவில்' படத்தின் திரையரங்க உரிமை, ஓ.டி.டி. உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமை என ஒட்டுமொத்தமாக ரூ.180 கோடி வரை படத்தின் வியாபாரம் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் கூட்டணி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தயத்திலும் அசத்தி விருதுகள் மேல் விருதுகளை குவித்து வருகிறார். கடந்த ஆண்டு அஜித்குமார் நடிப்பில் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகி 'ஹிட்' அடித்திருந்தது. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இந்தப் படத்துக்கு பிறகு அஜித்குமார் கார் பந்தயங்களில் பிசியானார். இதற்கிடையில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஷாலினி தயாரிப்பில் அஜித்
அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாக உள்ள இந்தப் படத்திற்கு 'டேர்டெவில்' என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த புதிய படத்தின் 'அப்டேட்' ஒன்று வெளியாகி இருக்கிறது.
ரூ.180 கோடி வரை வியாபாரம்
அதாவது படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமை, ஓ.டி.டி. உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமை என ஒட்டுமொத்தமாக ரூ.180 கோடி வரை படத்தின் வியாபாரம் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே படத்தின் முதல்கட்ட வியாபாரம் முடிந்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.