📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 23, 2026 08:04 PM

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: திமுக வழக்கு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: திமுக வழக்கு

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் ஏறக்குறைய ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அதிகாரபூர்வ அரசாணையையும் வெளியிட்டிருந்தது.

ஆனால், அத்திட்டத்துக்குத் தொடக்கம் முதலே அப்பகுதி மீனவ அமைப்புகளும் பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் வேலு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பட்டினப்பாக்கம் பகுதியானது சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் உணர்திறன் கொண்ட கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்குள் வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட விதிமுறைகளின்படி, கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் எந்தவிதமான புதிய, பெரிய கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அப்பகுதியில் தலைமைச் செயலகம் அமைப்பது கடலோரச் சுற்றுச்சூழல், மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவரும் இதே கோரிக்கையை முன்வைத்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழல் விதிகளை மேற்கோள் காட்டித் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.