📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 17, 2026 07:07 PM

புகைமூட்டம்: சிங்கப்பூரில் கவனமாக முகக்கவசங்கள் வாங்குக

புகைமூட்டம்: சிங்கப்பூரில் கவனமாக முகக்கவசங்கள் வாங்குக

மறுவிற்பனைச் சந்தையில், குறிப்பாகச் சமூக ஊடகத் தளங்கள் வழியாக முகக்கவசங்கள், காற்றுச் சுத்திகரிப்பான்கள் ஆகியவற்றை வாங்கும்போது பயனீட்டாளர்கள் கவனமாக இருக்கவேண்டும் என சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் (கேஸ்) சனிக்கிழமை (அக்டோபர் 17) கேட்டுக்கொண்டுள்ளது.

சமூக ஊடகத் தளங்களில் பொருள்களை விற்பனை செய்பவர்களின் நம்பகத்தன்மையைப் பெரும்பாலும் உறுதிப்படுத்த முடிவதில்லை எனச் சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் கூறினார்.

சிங்கப்பூரில் புகைமூட்ட நிலைமை மோசமடைந்துவரும் வேளையில், சில்லறை விற்பனையாளர்கள் சிலரிடம் என்95 முகக்கவசங்களுக்குத் தற்காலிகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையிலும், காற்றுச் சுத்திகரிப்பான்களின் இருப்பு தீர்ந்துபோயுள்ள நிலையிலும் அவரது பதிவு வெளியாகியுள்ளது.

சங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அக்டோபர் 16ஆம் தேதி கடைகளுக்குச் சென்றபோது, பல்வேறு சில்லறை விற்பனைக் கடைகளில் என்95 முகக்கவசங்களின் இருப்பு தீர்ந்துபோயிருந்ததைக் கண்டறிந்ததாக யோங் தெரிவித்தார்.

“புகைமூட்ட நிலைமை மோசமடைந்துவரும் சூழலில் என்95 முகக்கவசங்கள், காற்றுச் சுத்திகரிப்பான்கள் போன்ற சில பொருள்கள் உடனடியாகக் கிடைக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. இருப்பினும், பெரிய சில்லறை விற்பனைக் கடைகளில் போதிய இருப்பு உள்ளதையும் அவர்கள் விநியோகத்தைச் சீராக்கி வருவதையும் கவனத்தில் கொள்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

பெரிய சில்லறை விற்பனைக் கடைகளில் ஒட்டுமொத்தமாகப் போதிய அளவில் என்95 முகக்கவசங்கள் இருப்பில் உள்ளதாகவும், அவற்றுடன் பயனீட்டாளர் சங்கம் அணுக்கமாகத் தொடர்பில் இருந்துவருவதாகவும் அவர் கூறினார்.

பயனீட்டாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் பற்றாக்குறை நிலவும் கடைகளுக்குப் பொருள்களை மீண்டும் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் அக்கடைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.