தேர்தல் ஆணையர் பதவி விலகுக! தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பேரிழப்பு
தேர்தல் ஆணையர் பதவி விலகுக! தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பேரிழப்பு - விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும்; தொகுதி மறுசீரமைப்பை திமுக ஆதரிக்கக் கூடாது: எம்.பி. துரை. ரவிக்குமார் பேட்டி
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாநில துணைச்செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் எம்பி ரவிக்குமார் தலைமையில் நடந்தது, இதில் இந்திய ஜனநாயகத்தையும் தேர்தல் நடைமுறைகளையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பு சட்ட மசோதாவை திமுக ஆதரிக்கக் கூடாது என்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையர் பதவி விலக கோரிக்கை:
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை (SIR) என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட முறைகேடான நடவடிக்கைகளால் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும் மாணவர்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மெஷின் ரீடபிள் பட்டியலைத் தராமல் பிடிவாதம் காட்டிய ஆணையம், தற்போது போராட்டங்களைத் திசைதிருப்ப வழக்கமான திருத்தம் மேற்கொள்வதாகக் கூறி நாடகமாடுகிறது. இதனால் ஏற்கெனவே முறைகேடாக நீக்கப்பட்ட 13 கோடி வாக்காளர்களின் உரிமையோ, நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளோ மாறிவிடாது என்பதால் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகியே தீர வேண்டும்.
எஸ்ஐஆர் (SIR) மூலம் லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம்:
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 64 லட்சம் வாக்காளர்கள் 'ஆப்சென்ட்' மற்றும் 'ஷிப்டட்' என்ற பெயரில் வாக்குரிமை பறிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் சேர்த்து சுமார் 1,85,000 வாக்குகளும், சென்னை மாவட்டத்தில் மட்டும் 14 லட்சம் வாக்குகளும் நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களைக் களத்தில் நேரில் சென்று சரிபார்க்காமல் அலட்சியமாக இருந்ததே இந்த பெருமளவிலான வாக்கு நீக்கத்திற்குக் காரணம்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்காக பிற கட்சி எம்பிக்களை மிரட்டியும் கட்சித் தாவல் செய்தும் பாஜக நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. தேர்தல் நேரத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்து எதிர்த்த திமுக, தற்போது அதற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுப்பதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. இந்த மசோதாவை ஆதரிப்பது தமிழ்நாட்டிற்கும் ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கும் பேரிழப்பாக முடியும் என்பதால், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதிகளை 'ஃபிரீஸ்' (Freeze) செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானத்தின் நிலைப்பாட்டிலேயே திமுக உறுதியாக நிற்க வேண்டும்.
பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஒன்றிய அரசு:
ஒன்றிய பாஜக அரசின் தவறான நிர்வாகக் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ளதுடன் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியைக் குறைத்து கிராமப்புறப் பொருளாதாரத்தை பாஜக முடக்கியுள்ளதுடன், தங்கப் பத்திர விவகாரம் மற்றும் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு சரிவு என அனைத்து நிலைகளிலும் நிர்வாகத் திறமையின்மையே வெளிப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி