புதிதாக 2 ஸ்பின்னர்களை சேர்த்த பிசிசிஐ.. இந்திய டெஸ்ட் அணியுடன் இலங்கைக்கு பயணிக்கும் நெட் பவுலர்கள்
புதிதாக 2 ஸ்பின்னர்களை சேர்த்த பிசிசிஐ.. இந்திய டெஸ்ட் அணியுடன் இலங்கைக்கு பயணிக்கும் நெட் பவுலர்கள்
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில் சுழற் பந்துவீச்சாளர்களான தனுஷ் கோட்டியன் மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக அணியுடன் பயணிக்க உள்ளனர். இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய வீரர்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக மும்பையில் உள்ள முன்னாள் வீரர் ஜதின் பரஞ்சபேயின் அகாடமியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் தனுஷ் கோட்டியன் உள்ளிட்ட மும்பை சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டு பயிற்சி பெற்றனர்.
இலங்கை டெஸ்ட் தொடருக்கான முதன்மை அணியில் இடம் பெறாத தனுஷ் கோட்டியன் மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர், தற்போது வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக இந்திய அணியுடன் இணைந்து செயல்பட உள்ளனர். உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டும் இந்திய அணியில் இடம் கிடைக்காத தனுஷ் கோட்டியனுக்கு, இந்த வலைப்பயிற்சி வாய்ப்பு அவரது திறமையை நிரூபிக்க ஒரு நல்ல தளமாக அமையும்.
இவர்கள் இருவருடன் இணைந்து ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர் மற்றும் சாரன்ஷ் ஜெயின் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் இந்திய அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடருக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெரும்பாலான இந்திய வீரர்கள் தற்போது மும்பையில் ஒன்று கூடி உள்ளனர்.
இந்திய அணி ஆகஸ்ட் 4 அன்று இரவு சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்குப் புறப்படத் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், சாய் சுதர்சன், இந்திய அணியுடன் பயணிப்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அவர் உடற்தகுதி சான்றிதழ் பெற்ற பின்னரே அணியில் இடம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.