📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 28, 2026 06:01 PM

புதிய படங்கள் ரிலீஸ்: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

புதிய படங்கள் ரிலீஸ்: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

ஓடிடி ரிலீஸ் விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 1-ம் தேதி முதல் அறிவித்திருந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ் திரைப்படத் துறையில் தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு கவனத்துக்கு கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து ஆகஸ்ட் 26-ம் தேதி தலைமைச் செயலகத்தில் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து, திரைத்துறையில் உள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்து அதை மனுவாக அளித்தோம்.

அந்த மனுவினை பரிசீலித்த அமைச்சர், சம்பந்தப்பட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துக்கும் தற்போது தமிழகத்தில் திரைப்பட வெளியீட்டில் என்ன நடைமுறை உள்ளதோ அதனைத் தொடர்ந்து பின்பற்றுங்கள்.

சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்த உடன் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களை தமிழக அரசு அழைத்து மேற்கூறிய பிரச்சினைக்கு தீர்வு காணும் என்று தெரிவித்தார். மேலும், தற்போது வேலை நிறுத்தம் வேண்டாம் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களையும் அறிவுறுத்தினார்.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கவனத்துக்கு கொண்டு சென்று அவரின் வழிகாட்டுதலோடு முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெறும் என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவது இல்லை, படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளை நிறுத்துவது என்று அறிவித்த வேலை நிறுத்தம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஓடிடி ரிலீஸ் விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறுத்தப்படும் என்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகஸ்ட் 22-ம் தேதி அறிவித்திருந்தது.