📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 12, 2026 02:01 AM

புதியவற்றை கற்க விரும்புபவர்களுக்கு திருக்குறள் நல்ல வழிகாட்டி எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரம் மரபுகளை எடுத்துச் செல்லுங்கள்: மாண

புதியவற்றை கற்க விரும்புபவர்களுக்கு திருக்குறள் நல்ல வழிகாட்டி எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரம் மரபுகளை எடுத்துச் செல்லுங்கள்: மாண

புதியவற்றை கற்க விரும்புபவர்களுக்கு திருக்குறள் நல்ல வழிகாட்டி எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரம் மரபுகளை எடுத்துச் செல்லுங்கள்: மாணவர்களிடையே பிரதமர் மோடி பேச்சு

சென்னை: புதியவற்றை கற்க விரும்புவர்களுக்கு திருக்குறள் நல்ல வழிகாட்டி எனவும், இந்தியா முழுவதும் பயணம் செய்யுங்கள்; எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரம், மரபுகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் எனவும் மாணவர்களுக்கிடையே பிரதமர் மோடி கூறினார். விஸ்வ ஹிந்து வித்யா கேந்திரம் நடத்தும் ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா கொண்டாட்டம் நேற்று சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய்யத்தில் நடந்தது. அதில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

விழாவில் கல்வி நிறுவனத்தின் ஐந்து தசாப்த கால வரலாற்றை விவரிக்கும் ‘ஜர்னி ஆப் இந்து வித்யாலயா’ என்ற சிறப்புக் காணொலி வெளியிடப்பட்டது. மேலும், பொன்விழா மலர் வெளியீடு மற்றும் மாணவர்களின் தேசபக்தி பாடல் நிகழ்ச்சி இடம்பெற்றன. தொடர்ந்து, அந்த பள்ளியின் செயற்கை நுண்ணறிவு பள்ளி ஆய்வகத்தையும் பிரதமர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஜெய்கோபால் கரோடியா பள்ளியின் தலைவர் கோபால்ஜி, கிரிஜா சேஷாத்ரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடி பேசியதாவது: இன்று பாரதத்தில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு இளைஞரும் தங்கள் எதிர்காலத்தைப் பெரிய அளவில் திட்டமிட்டுப் பார்க்க வேண்டும். இது உங்களுக்கான காலம், உங்களுக்கான சந்தர்ப்பம்; நமது கனவுகள் நிச்சயம் நனவாகும். நாம் அனைவரும் இணைந்து இதைச் சாதிப்போம்.

திருக்குறள் நல்ல வழிகாட்டி. கற்ற வழியில் வாழ வேண்டும் என்ற வள்ளுவனின் வழிகாட்டுதல் மாணவர்களாகிய உங்களுக்கு மிக முக்கியமானது. இந்தியா முழுவதும் பயணம் செய்யுங்கள். ஆனால், எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், கவிதைகள், மரபுகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். அங்குள்ள வேறுபட்ட பின்புலத்தை சேர்ந்தவர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

* மன்னிப்புக்கேட்ட பிரதமர் மோடி

சென்னைக்கு நான் திட்டமிட்ட நேரத்திற்கு 10 நிமிடங்கள் முன்பாகவே வந்துவிட்டேன். ஆனால், சில நிகழ்வு மாற்றங்களால் உங்களிடம் வந்து சேரச் சற்று தாமதமாகிவிட்டது. உங்களுக்கு ஏற்பட்ட இந்த அசவுகரியத்திற்காக உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்புக் கோருகிறேன்.