📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 26, 2026 02:33 AM

பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் போராட்டம் வெடிக்கும்

பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் போராட்டம் வெடிக்கும்

பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் போராட்டம் வெடிக்கும் - அய்யாக்கண்ணு

காவிரி ஆற்றில் மணல் அள்ளும் பணியினை அரசு மேற்கொண்டால், அங்கிருந்து ஒரு கைப்பிடி மணலை கூட அல்ல விட மாட்டோம் என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

Published : July 25, 2026 at 8:45 PM IST

கரூர்: விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால், சட்டசபை முன்பு போராட்டம் நடத்தப்படும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

கரூர் கிருஷ்ணராயபுரத்தில் தமிழக விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி இன்று (ஜூலை 25) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேர்தல் நேரத்தில் விவசாயிகளை இந்த நாட்டின் முதுகெலும்பு என்று கூறும் அரசியல் கட்சிகள், தேர்தல் முடிந்ததும் விவசாயிகளை மறந்துவிட்டு, அடிமையாக நடத்துகிறார்கள். ஒன்றிய அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதில் பாரபட்சம் காட்டுகிறது. பெரும்பாலான விவசாயிகள் இந்துக்களாக உள்ளனர்.

ஆனால், இந்துக்களுக்காக ஆட்சி நடத்துகிறோம் என்று கூறும் மோடி அரசு, ஏன் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.24 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ள ஒன்றிய அரசுக்கு, விவசாயிகளின் விவசாய கடனை தள்ளுபடி செய்ய மனமில்லாதது ஏன்?

நாட்டு மக்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு விவசாயிகளால் மட்டும் தான் வழங்க முடியும். ஆனால், ஒன்றிய மோடி அரசு அமெரிக்காவிலிருந்து உணவுப் பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய திட்டமிட்டு, இரு நாடுகளும் கூட்டாக கையெழுத்திட்டுள்ளது. ஒருவேளை அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு உணவு இறக்குமதி செய்யப்பட்டால், இந்திய மக்கள் முழு ஆரோக்கியமாக இருக்க முடியாது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதேபோன்று, தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியதைப் போல, சிறுகுறு விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாமல், வெறும் கண் துடிப்புக்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசு விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளது.

எனவே, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி இனி தொடர்ந்து போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக சென்னையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டசபை முன்பு போராட்டத்தை தொடங்கவுள்ளோம். விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிடும் வரை இப்போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என தெரிவித்தார்.

மேலும், “காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கான அனுமதி வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஒருவேளை மீண்டும் காவேரி ஆற்றில் மணல் அள்ளும் பணியினை அரசு மேற்கொண்டால், அங்கிருந்து ஒரு கைப்பிடி மணலை கூட அல்ல விட மாட்டோம்.

அதேபோல, காவிரி குண்டாறு வைகை நதிகள் இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாமல் அரசு காலம் தாமதம் செய்து வருவது நல்லதல்ல. மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது கோதாவரி காவேரி நதியினை இணைத்தால் 300 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக தமிழக விவசாயிகளுக்கு கிடைக்கும் என்று கூறினார். ஆனால் நதிகள் இணைப்பு இன்னும் சாத்தியமாகவில்லை. அதற்கு காரணம் இன்னும் விவசாயிகள் ஒன்றாக இணைந்து போராடவில்லை.

கடந்த 2 ஆண்டுகளாகக் காவிரி குண்டாறு வைகை நதி இணைப்பு திட்டம் முடக்கத்திற்குக் காரணமான போதிய நிதியை ஒதுக்கீடு செய்யாவிட்டால், விரைவில் திருச்சி நெடுஞ்சாலையில் பத்தாயிரம் விவசாயிகள் அமர்ந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” என எச்சரித்தார்.