பழனி கோயில் நில மோசடி வழக்கு: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் 2வது நாளாக சிபிசிஐடி விசாரணை
பழனி கோயில் நில மோசடி வழக்கு: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் 2வது நாளாக சிபிசிஐடி விசாரணை
பழனி கோயில் நில மோசடி வழக்கை சிபிஐ வசம் மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Published : July 28, 2026 at 3:47 PM IST
திண்டுக்கல்: பழனி கோயில் நில மோசடி வழக்கில் 2வது நாளாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்தின் நில மோசடி தொடர்பாக, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் போலி அறக்கட்டளை பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 15 அன்று இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தென்மண்டல எஸ்பி சாஜிதா நேரடியாக வருகை தந்து, கோயில் செயல் அலுவலர் கணபதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.
இவ்வழக்கு தொடர்பாக, கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வுபெற்ற வட்டாட்சியர் மாரியப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன் ஆகியோரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு, 1880ஆம் ஆண்டு முதல் உள்ள ஆவணங்கள் பெறப்பட்டன.
மேலும், வருவாய்த் துறை அலுவலர்கள் சார்பில் நிலத்தின் பல்வேறு காலகட்ட நில வகைப்பாடு தொடர்பான ஆதார ஆவணங்கள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தபோது அங்கு செயல்பட்ட கடைகளுக்கு எந்த ஆவணங்களின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் கேட்டு மின்வாரியத்திற்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதனடிப்படையில் மின்வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை, சிபிசிஐடி அதிகாரிகள் திண்டுக்கல் அலுவலகத்தில் வைத்து தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஏற்கனவே நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. அந்த உத்தரவின்படி, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நேற்று (ஜூலை 27) திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு விசாரணைக்காக ஆஜரானார்.
அவரிடம் சிபிசிஐடி ஆய்வாளர் சந்தானலட்சுமி, டிஎஸ்பி அஜய் தங்கம் ஆகியோர் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, இன்று 2வது நாளாக தென்மண்டல சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஷாஜிதா, ஜஸ்டின் மணிகண்டன், இந்த வழக்கில் சாட்சிகளான சுப்பிரமணி, மணி ஆகிய மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
இதனிடையே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி இருதரப்பில் இருந்தும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவை சேர்ந்த வேணுகோபாலு சேனாபதி என்பவர் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி பழனி நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி என்பவர் தாக்கல் செய்த மனுவை இதனுடன் இணைந்து விசாரிக்க வேண்டும் என திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் ரவீந்திரன், வீரா கதிரவன் ஆகியோர் நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
அதனைத் ஏற்று, வரும் ஜூலை 30 வியாழக்கிழமை இரண்டு வழக்குகளை ஒன்றாக விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டு வழக்கை ஒத்திவைத்தனர்.