📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 12, 2026 07:36 AM

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை... விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை... விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு!

மீனம்பாக்கம்,

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் விமானங்களில் கட்டணம் 4 மடங்கு உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் வருகிற 14-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா திங்கட்கிழமை வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து 3 நாள் விடுமுறைகள் வருகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்காக பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி வட மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவதால், தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

விமான கட்டணம் உயர்வு

சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் கட்டணங்கள் 3 முதல் 4 மடங்கு வரை கடுமையாக உயர்ந்துள்ளன. இது பயணிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதன்படி சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.6.991 ஆக இருந்த கட்டணம் நேற்று ரூ.17,153 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை-மதுரைக்கு ரூ.5,393 ஆக இருந்த கட்டணம் ரூ.19,761 ஆக அதிகரித்துள்ளது. சென்னை-திருச்சி இடையே ரூ.4,646 ஆக இருந்த கட்டணம் ரூ.14,673 ஆக வும். சென்னை-கோவைக்கு ரூ.4,966 ஆக இருந்த கட்டணம் ரூ.16,496 ஆகவும் அதிகரித்துள்ளது.

சென்னை-பெங்களூருவுக்கு வழக்கமாக ரூ.3,801 ஆக இருந்த கட்டணம் ரூ.17,993 ஆகவும், சென்னை-ஐதராபாத்துக்கு ரூ.4.467 ஆக இருந்த கட்டணம் ரூ.18,207 ஆகவும், சென்னை-டெல்லிக்கு ரூ.8,943 ஆக இருந்த கட்டணம் ரூ.31,047 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னை-மும்பை இடையே ரூ.6,516 ஆக இருந்த கட்டணம் ரூ.24,592 ஆகவும், சென்னை-கொல்கத்தா இடையே ரூ.6,250 ஆக இருந்த கட்டணம் ரூ.20,716 ஆகவும் அதிகரித்து இருந்தது.

இவ்வாறு உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். ஆனாலும் தொடர் விடுமுறையை சொந்த ஊரில் கழிப்பதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி விமானங்களில் பயணித்து வருகின்றனர்.