📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 21, 2026 08:33 PM

பழநி மடம் நில மோசடி குறித்து சிபிஐ விசாரணை தேவை; ராம ரவிக்குமார் வலியுறுத்தல்

பழநி மடம் நில மோசடி குறித்து சிபிஐ விசாரணை தேவை; ராம ரவிக்குமார் வலியுறுத்தல்

நமது நிருபர்

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடம் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது குறித்து சி.பி.ஐ., விசாரணை தேவை. இதை வலியுறுத்தி நீதிமன்றத்தை நாட உள்ளதாக பழநியில் ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிக்குமார் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: பழநி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததை தொடர்ந்து குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி., தேடி வருகின்றனர். மடத்தின் தக்காராக கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து இருந்துள்ளார். அவருக்கு மட்டுமே இதுகுறித்த முடிவுகள் எடுக்க முழு அதிகாரம் உள்ளது.

2026 மார்ச் 27ல் சர்ச்சைக்குரிய நிலத்தின் பதிவுக்கு வரும்போது சார்பதிவாளராக இருந்த பழனிச்சாமி அதற்கு மறுத்துள்ளார். தொடர்ந்து முருகதாஸ் தரப்பினர், இந்நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோர் 2026 ஏப்.,10ல் நிலத்தை பதிய நீதிமன்றத்தில் அனுமதி பெறுகின்றனர். அதன்பின் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் கோயில் இணை கமிஷனராக இருந்தவர் கிடப்பில் போட்டுள்ளார்.

பதிவு குறித்த நினைவூட்டல் கடிதத்தை இணை கமிஷனராக இருந்தவருக்கு சார் பதிவாளர் பழனிச்சாமி அனுப்பியுள்ளார். உயரதிகாரியின் வழிகாட்டுதலின்படி இது நடந்துள்ளதோ என சந்தேகம் எழுகிறது.

2026 ஏப்.,10ல் வெளியிடப்பட்ட தீர்ப்பை பழநி கோயில் முன்னாள் இணை கமிஷனர் மாரிமுத்து 60 நாட்கள் கண்டும் காணாமல் இருந்ததற்கான காரணம் என்ன. தண்டபாணி சுவாமி மடத்திற்கும் கோயில் நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லாத நிலையில் கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் மூலம் புகார் அளித்து இந்த வழக்கை முன்னாள் இணை கமிஷனர் நீர்த்துப்போக செய்துள்ளார். தண்டபாணி சுவாமி மடத்திற்கான தக்கார் மாரிமுத்து தான் புகார் அளித்திருக்க வேண்டும்.

பிரச்னைக்குரிய நிலம் 2026 ஜூலை 3ல் பத்திரம் பதிவு செய்யும் பணி தொடங்குகிறது. அன்று இணை கமிஷனருக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. 2026 ஜூலை 6ல் பத்திரம் பதியப்பட்டு வெளியிடப்படுகிறது. 2026 ஜூலை 9ல் பதவி உயர்வு பெற்ற இணை கமிஷனரின் பதவி உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் நடந்தவை உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்படுகிறது.

சார்பதிவாளர் பதிவு செய்ய இணையதளத்திற்குள் ஒரு குறியீடு இருக்கும். அதேபோல் அவரை பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க மேல்மட்டத்தில் ஒரு குறியீடு இருக்கும். இதுபோன்று தொழில்நுட்ப பாதுகாப்பு உள்ள நிலையில் வந்தவுடன் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் எவ்வாறு பதிவு செய்ய முடியும்.

சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் இருக்கும் போது பத்திரப்பதிவுத்துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரிப்பது ஏற்புடையதாக இல்லை. இதுதொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றார்.