📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 28, 2026 10:33 PM

 பழநி மடம் நில மோசடி வழக்கு; இதுவரை 82 பேரிடம் விசாரணை

 பழநி மடம் நில மோசடி வழக்கு; இதுவரை 82 பேரிடம் விசாரணை

திண்டுக்கல்: பழநி மடம் நில மோசடி வழக்கில் இதுவரை 82 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில், தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் தனி நபர்களுக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்த புகாரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளையை சேர்ந்த முருகதாஸ், திருப்பூர் மாவட்டம், உடுமலை பாப்பன்குளம் வெள்ளத்துரை, பழநி சேதுபதி, கோவில் நிர்வாக அதிகாரிகள், வருவாய் துறையினர், பதிவுத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தினர்.

இவ்விவகாரத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார் - பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், இன்று 2வது நாளாக காலை, 10:30 மணிக்கு திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் எஸ்.பி., சஜிதா விசாரணை நடத்தினார். மாலை, 5:30 மணி வரை ஏழு மணி நேரம் விசாரணை நடந்தது. இதுதவிர, நிலம் விற்பனை தொடர்பாக முருகதாசுடன் தொடர்பில் இருந்த இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு, சாட்சிகளை போலீசார் ஆவணப்படுத்தினர்.

மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட இடத்தின் பல்வேறு காலகட்ட நில வகைப்பாடு, பதிவுத்துறை கோப்புகள், ஆவணங்கள், பராமரிப்பு ஆவணங்களை பெற்று போலீசார் ஆய்வு செய்தனர். நீதிமன்ற வழக்கு, பத்திரப்பதிவு, விற்பனையாளர், பயனாளி, சாட்சிகள், புரோக்கர், எழுத்தர், பராமரிப்பு, நிர்வாகம் என இதுவரை, 82 பேரிடம் விசாரணை நடத்தி சாட்சியங்களை சேகரித்துள்ளனர்.