📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 23, 2026 08:01 PM

பழநி மடம் நிலம் விற்பனை மோசடி; சி.பி.ஐ., விசாரணை கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு

பழநி மடம் நிலம் விற்பனை மோசடி; சி.பி.ஐ., விசாரணை கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரிய வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எல்.விக்டோரியா கவுரி உத்தரவிட்டார்.

பழநி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தாக்கல் செய்த மனு: பழநி அடிவாரத்தில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமாக ரூ.100 கோடி மதிப்புள்ள 1.35 ஏக்கர் நிலம் உள்ளது. அது பக்தர்களின் நலனிற்காக ஒருவரால் தானமாக வழங்கப்பட்டது. அறநிலையத்துறை கமிஷனர் 1999 ல் பிறப்பித்த உத்தரவின்படி மடத்தின் தக்காராக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

அந்நிலம் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பழநி டி.கே.என்.புதுார் சேதுபதி, திருப்பூர் மாவட்டம் பாப்பான்குளம் வெள்ளத்துரை பெயர்களில் ரூ.2 கோடிக்கு கிரையமாக ஜூலை 3 ல் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு அடிப்படையில், பத்திரப்பதிவை ரத்து செய்தது உயர்நீதிமன்றக் கிளை. மோசடி தொடர்பாக வெள்ளத்துரை, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பழநி அடிவாரம் போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு தமிழக அரசு மாற்றியது.

இவ்விவகாரத்தில் அறநிலையத்துறை, பத்திரப்பதிவு துறைகள் சம்பந்தப்பட்டுள்ளன. அத்துறைகளின் அமைச்சர்கள் சிறு தவறு நடந்தது போல் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் பாரபட்சமின்றி விசாரணை மேற்கொள்ள வாய்ப்பில்லை. அதன் விசாரணைக்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டும். வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கைப்பற்றிய ஆவணங்களை பாதுகாத்து சி.பி.ஐ.,வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவில், ''இதை சி.பி.ஐ.,தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சம்பந்தப்பட்ட நீதிபதி முன் உயர்நீதிமன்ற பதிவுத்துறை பட்டியலிட வேண்டும்,'' என்றார்.