பழனிசாமியை சந்தித்தார் வேலுமணி: மறப்போம், மன்னிப்போம்!
சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, வேலுமணி தரப்பு சமரசம் செய்த நிலையில், 'மறப்போம், மன்னிப்போம்' என முடிவெடுத்து, இரு தரப்பினரும் மீணடும் ஒன்றாக இணைந்தனர். அனைவரையும் அரவணைத்து செல்ல பழனிசாமி முடிவு செய்துள்ளதாக, அக்கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
வலுவிழந்த வேலுமணி அணி
அ.தி.மு.க.,வின் தொடர் தோல்வி காரணமாக, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அணி திரட்டினார். அந்த அணியில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி, அதை த.வெ.க., ஆதரவு அணியாக மாற்றினார்.
இந்நிலையில், வேலுமணி அணியில் இருந்த நான்கு எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.,வுக்கு தாவினர். அதேபோல், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் பழனிசாமி அணிக்கு திரும்பினர்.
அப்போது, தலைமை கழக பதவிகள் உடனே கிடைக்கும் என்றும், கட்சி மாவட்டங்களை பிரித்து, மாவட்ட செயலர் பதவி தரப்படும் என்றும் பழனிசாமி வாக்குறுதி அளித்தார். அதில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் நேற்று சென்னையில் பழனிசாமியை சந்திக்க முடிவு செய்தனர்.
இதற்கு முன், சென்னை, எம்.ஆர்.சி., நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில் கூடினர். ஆனால், பழனிசாமியுடன் மீண்டும் சேர சண்முகம் விரும்பவில்லை. அதனால், அவரை தவிர்த்து, வேலுமணி தலைமையில் 13 எம்.எல்.ஏ.,க்கள், பழனிசாமியை அவரது வீட்டில் நேற்று மதியம் 12:10 மணிக்கு சந்தித்தனர்.
அப்போது, பழனிசாமி தலைமையை ஏற்று, அவரது உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்பட உறுதி தெரிவித்து கடிதம் அளித்தனர். ஆனால், வேலுமணியுடன் பழனிசாமியை சந்திக்க, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செல்லவில்லை. அவர் நேராக தலைமை செயலகத்துக்கு சென்று விட்டார்.
அதேபோல், சண்முகமும் தன் பாலவாக்கம் வீட்டுக்கு சென்று விட்டார். பழனிசாமியை சந்தித்து விட்டு தலைமை செயலகம் வந்த வேலுமணி தரப்பினர், சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்.
இதற்கிடையே, பாலவாக்கம் வீட்டுக்கு சென்ற சண்முகத்தை பார்த்து, தங்கமணி சமாதானம் செய்து, எம்.ஆர்.சி., நகருக்கு அழைத்து வந்தார். அவருடன் சமாதான பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையில், கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து விட்டதால், பழனிசாமி மகிழ்ச்சி அடைந்துள்ளார். அனைவரையும் அரவணைத்து செல்லவும் அவர் முடிவெடுத்துள்ளார் என, அக்கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
கொடுத்த மனுக்களை திரும்ப கேட்டு சபாநாயகரிடம் இரு தரப்பும் கடிதம் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோற்றதால், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி மீது, எம்.எல்.ஏ.,க்கள் 25 பேர் அதிருப்தி அடைந்தனர்; சண்முகம், வேலுமணி தலைமையில் அணி சேர்ந்தனர். சட்டசபையில் த.வெ.க., பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு, கட்சி தலைமை உத்தரவை மீறி 25 பேரும் ஓட்டளித்தனர். இரு தரப்பினரும் தங்களது அணியில் உள்ளவர்களை, சட்டசபை குழு தலைவராகவும், கொறடாவாகவும் நியமிக்க வேண்டும் என, சபாநாயகர் பிரபாகரிடம் மனு அளித்தனர். த.வெ.க., அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த வேலுமணி அணியினரை, கட்சி தாவல் சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, பழனிசாமி அணி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. தங்களுக்கு அதிக எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதால், பழனிசாமி தரப்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என, வேலுமணி அணி தரப்பில் மற்றொரு மனு தரப்பட்டது. இவ்வாறு சபாநாயகரிடம் இரண்டு அணிகள் தரப்பிலும், ஐந்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், பழனிசாமி - வேலுமணி அணியினர் இடையே நடந்த சமரச முயற்சி வெற்றி பெற்றதால், சபாநாயகரிடம் இரு தரப்பினரும் கொடுத்த மனுக்களை திரும்ப கேட்டு, நேற்று கடிதம் அளித்தனர். அப்போது, வேலுமணி அணியைச் சேர்ந்த சண்முகம் மட்டும் வரவில்லை; அவரது கையெழுத்து மட்டும் அதில் இருந்தது. மனுக்களில் இடம்பெற்ற பெயர்களை சபாநாயகர் வாசித்து, சம்பந்தப்பட்டவர்கள் அங்கு உள்ளனரா என்பதை உறுதி செய்து கொண்டார். 'சி.வி.சண்முகம் எங்கே' என சபாநாயகர் கேள்வி எழுப்பினார். சபாநாயகர் அறையில் இருந்தபடியே, அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு விஜயபாஸ்கர் அழைப்பு விடுத்தார். 'இதோ வந்து விடுவார்; அதோ வந்து விடுவார்' என, 20 நிமிடங்களுக்கு மேலாக சண்முகம் வருகைக்கு காத்திருந்தனர்; கடைசி வரை அவர் வரவே இல்லை. இதையடுத்து, மனுவை அளித்து விட்டு அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். நான்கு எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்த நிலையில், தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை 43 ஆக குறைந்துள்ளது. ***
நீங்கியது கருத்து வேறுபாடு சட்டசபை தேர்தலில் கட்சி தோல்வியை சந்தித்த பின், சில கருத்துகளை நாங்கள் கூறினோம். மக்கள் செல்வாக்கு இருந்ததால், சட்டசபையில் ஆளுங்கட்சி ஆதரவு நிலையை எடுத்தோம். நான் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, சபாநாயகரிடம் எங்கள் கட்சியைச் சேர்ந்த 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி மனு அளித்தார். நாங்களும் 22 பேரை தகுதி நீக்க மனு கொடுத்தோம். இப்போது, இரண்டு மனுக்களையும் வாபஸ் பெற்று விட்டோம். கட்சியில் பிளவு எதுவும் ஏற்படவில்லை. எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தான். இப்போது கருத்து வேறுபாடு நீங்கி விட்டது. அ.தி.மு.க., இனி ஒற்றுமையாக வலுவோடு செயல்படும். இப்போது ஒற்றுமையாக இருக்கிறோம். அ.தி.மு.க., ஒன்றுகூடி விட்டது. கருத்து வேறுபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளன. சி.வி.சண்முகமும் எங்களுடன் தான் இருக்கிறார். எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்
'இருந்ததும் போச்சே' புலம்பும் மா.செ.,க்கள் அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் சிலர் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் வேலுமணி அணிக்கு 25 எம்.எல்.ஏ.,க்களுடன், 16 மாவட்ட செயலர்களும் ஆதரவு அளித்தோம். இதனால் டென்ஷனான பழனிசாமி, எம்.எல்.ஏ.,க்கள் வகித்த கட்சி பதவியை பறித்ததோடு, அவர்களில் ஆதரவளித்த மாவட்ட செயலர்கள் 16 பேரின் கட்சி பதவியையும் பறித்து விட்டார். இதில், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலராக இருந்த பெஞ்சமின், பழனிசாமியை உடனே சந்தித்து வருத்தம் தெரிவித்தார்; அதனால், அவரது பதவி தப்பியது. மற்ற 15 பேரிடம், 'வாரிய தலைவர் பதவி வாங்கி தருகிறோம்' என வேலுமணி தரப்பினர் நம்பிக்கை அளித்தனர். வேலுமணி தரப்பு உறுதியாக இருந்ததால், நாங்கள் பழனிசாமி பக்கம் போகவில்லை. இந்நிலையில், வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் பழனிசாமியை சந்தித்து, மனஸ்தாபத்தை முடித்துக் கொண்டனர்; அதோடு, தங்களுக்கான கட்சி பதவியையும் கேட்டுள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ.,க்களாக இருப்பவர்களுக்கு, மீண்டும் மா.செ., பதவியை கொடுக்க மாட்டேன் என பழனிசாமி கூறுகிறார். அப்படியென்றால், எங்கள் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. வேலுமணி, சண்முகத்தை நம்பி வந்த எங்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சபாநாயகர் இன்று முடிவு அ.தி.மு.க.,வின் இரு வேறு தரப்பு அளித்த மனுக்கள் மீது, இன்று முடிவு அறிவிக்கப்பட உள்ளதாக சபாநாயகர் பிரபாகர் கூறினார். தலைமை செயலகத்தில் அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்று, சட்டசபைக்கு வந்தவர்கள் இரு குழுக்களாக பிரிந்து, பல்வேறு மனுக்களை அளித்தனர். அவை என் ஆய்விலும், நடவடிக்கையிலும் இருக்கின்றன. இன்றைக்கு மீண்டும் இரு குழுவினரும் மனு அளித்தனர். அவற்றை படித்து பார்த்து ஆய்வு செய்து, இன்று காலை முடிவு அறிவிக்கப்படும். சட்டசபை விதிகளுக்கு உட்பட்டு, என் முடிவுகள் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.