📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 05, 2026 12:03 AM

ராகுல் காந்தியின் 2029 கனவு: இண்டியா கூட்டணியில் காங்கிரஸின் சவால்கள் என்னென்ன?

ராகுல் காந்தியின் 2029 கனவு: இண்டியா கூட்டணியில் காங்கிரஸின் சவால்கள் என்னென்ன?

இந்திய அரசியல் எனும் பிரம்மாண்டமான சதுரங்கக் களத்தில், சில கதாபாத்திரங்கள் வெற்றியால் வரையறுக்கப்படுகின்றன; சில போராட்டங்களால் செதுக்கப்படுகின்றன. ஆனால், ராகுல் காந்தி என்ற பெயர் தொடர் வீழ்ச்சிகள், கடும் கேலிப் பேச்சுகள், எதிர்பாராத மீண்டெழுதல் எனப் பல பரிமாணங்களால் கட்டமைக்கப்பட்டது.

“அரசியலுக்கு வேண்டா வெறுப்பாக வந்தவர், பப்பு” என்று ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர், இன்று நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்துள்ளார். நேரு - காந்தி குடும்பத்தின் வாரிசுக்கு அரசியல் அதிகாரம் பிறப்பிலேயே கிடைத்த வரமாகக் கருதப்பட்டாலும், அது இன்று வரை ராகுல் காந்திக்கு மட்டும் எளிதில் சிக்காத முள்கிரீமாக மாறியதுதான் இந்திய அரசியலின் மிகப் பெரிய முரண்.

2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல் தோல்விகளுக்குப் பின், அவரின் அரசியல் நெகிழ்வுத்தன்மை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதேநேரம், நடைமுறைக்கு ஒத்துவராத சில கொள்கைகள் மற்றும் தேசியக் கட்சி என்ற ஆணவப்போக்கு ஆகியவை ராகுல் காந்தியின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன.

2029 மக்களவைத் தேர்தலுக்குக் காலம் உள்ள நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்த காங்கிரஸ் காய்களை நகர்த்துகிறது. ஆனால், அதற்குத் தடையாக இருப்பது பாஜகவல்ல; ராகுலுக்கு யாருடைய ஆதரவு தேவையோ, அதே கூட்டணிக் கட்சிகளே அவருக்குத் தடையாக அமையக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ராகுலை ‘ஏற்காத’ இண்டியா கூட்டணி

இண்டியா கூட்டணி என்பது ஒரே தலைவர், ஒரே கொள்கை மற்றும் ஒரே கட்டமைப்பு கொண்ட ஒரு வழக்கமான அரசியல் இயக்கமாக உருவாக்கப்படவில்லை. மாறாக, இது முற்றிலும் மாறுபட்ட பிராந்திய நலன்களையும், லட்சியங்களையும் கொண்ட கட்சிகளின் ஒரு தேர்தல் கூட்டணியாகவே அமைந்தது. இந்தக் கூட்டணியின் ஒருமித்த நோக்கம் என்பது பாஜகவுக்கு எதிரான கோஷம், பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்குவது என்ற சிந்தனை மட்டும்தான்.

பிராந்தியக் கட்சிகளான சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ்) ஆகிய ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விதமான தேசிய அளவிலான லட்சியங்களும் கொள்கைகளும் இருக்கின்றன. இண்டியா கூட்டணியை யார் வழிநடத்த வேண்டும், எதிர்க்கட்சிகளை யார் ஒருங்கிணைக்க வேண்டும், வழிகாட்ட வேண்டும் என்பதில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கிறது.

ராகுல் காந்தி எதிர்கொள்ளும் முக்கிய முரண்பாடு, தேசியக் கட்சியான தாங்கள்தான் தலைமை வகித்துச் செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், பிராந்தியக் கட்சிகளோ இந்தக் கூட்டணியை முதன்மையாக பாஜகவை வீழ்த்துவதற்கான ஒரு கருவியாகவே பார்க்கின்றன. தவிர, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்து அரசியல் செய்ய வேண்டும் என்றோ, ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டும் என்றோ அவர்கள் எண்ணவில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தமிழகச் சூழல் எப்படி?

தமிழக அரசியலில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தவெக தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய் ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதும், விஜய் பிரதமராக வரவேண்டும் என்று தவெக நிர்வாகிகள் சிலர் கூடுதல் விசுவாசத்தை காண்பித்ததும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது எதிர்க்கட்சிகளுக்குள் உள்ள அடிப்படை முரண்பாட்டை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

பாஜகவுக்கு எதிரான தேசிய அளவிலான இயல்பான சவாலாளராக ராகுல் அங்கீகரிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், பிராந்தியக் கட்சிகளுக்கோ சொந்தத் தலைவர்கள், வாக்கு வங்கிகள் மற்றும் அரசியல் கணக்குகள் உள்ளன. தமிழகத்தில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக மாநிலக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸுக்கு, ராகுலைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த மாநிலக் கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவு தேவைப்படுகிறது.

தமிழகத்தில் திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு பிராந்தியக் கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவு தேவை.

ராகுல் காந்திக்கு காத்திருக்கும் சவால்கள்

காங்கிரஸ் தலைமையும், சோனியா குடும்பமும் ராகுல் மீதான நம்பிக்கையை இழக்கவில்லை. கடந்த தேர்தலில் கணிசமான இடங்களில் வென்று எதிர்க்கட்சித் தலைவரானாலும், ஒருமித்த பிரதமர் வேட்பாளராக அவர் மாறுவார் என்பதற்கு உத்தரவாதமில்லை.

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு கணிசமாக வென்றால் மட்டுமே ராகுலின் பேரம் பேசும் சக்தி வலுப்பெறும். நரேந்திர மோடியையோ, பாஜகவின் கட்டமைப்பையோ வீழ்த்துவது மட்டுமே ராகுலுக்கு சவால் அல்ல. வெற்றிக்குப் பின் கூட்டணிக்குள்ளேயே தலைமைக்கான பல போட்டியாளர்கள் உருவாவதைத் தடுப்பதே மாபெரும் சவாலாகும்.

உ.பி முதல் டெல்லி வரை:

உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் கூட்டணியின் முக்கிய முகமாக இருக்கிறார். அங்கு முலாயம் சிங் குடும்பத்தினரை வைத்துதான் அரசியல் செய்யப்படுகிறது. அங்கு காங்கிரஸ் கட்சி தனது தேசிய கட்சியின் பெரியண்ணன் போக்கு என்பது ராகுல் காந்திக்கு பெரிய தடையாக இருக்கும். இந்தச் சூழலில், 2027 சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் நெகிழ்வுத் தன்மையுடன் அங்கு நடந்து கொள்வது அவசியம்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுடன் நல்லுறவை ஏற்படுத்தினால் காங்கிரஸ் மீண்டும் துளிர்க்கலாம். திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தில் இப்போது மம்தாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் எடுக்கும் நிலைப்பாடு, தேர்தல் நேரத்தில் மம்தாவின் பிரச்சாரம் பெரிய பலமாக மாறும்.

ஆம் ஆத்மி கட்சியும் இண்டியா கூட்டணியில் இருந்து விலகியே நிற்கிறது. ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில்கூட ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை. டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை எதிர்த்துக் களமிறங்கியது போன்ற செயல்கள் இனிமேலும் காங்கிரஸ் கட்சி செய்தால், அது கூட்டணி தர்மத்தைச் சிக்கலாக்கும். மாநில அளவில் நேரடிப் போட்டியாளர்களாக இருக்கும் நிலையைக் காங்கிரஸ் கட்சி மாற்றுவது பெரிய சவாலாகும்.

காங்கிரஸின் விருப்பத் தேர்வாக மட்டுமன்றி, கூட்டணிக் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நபராக ராகுல் காந்தி மாற வேண்டும். அதற்கு அரசியல் நம்பிக்கை, தேர்தல் பலம் மற்றும் பிராந்தியத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மனப்பான்மை தேவை.

2029 தேர்தலில் எந்தவொரு கூட்டணிக் கட்சியும் தன்னைவிட வலுவான வேட்பாளரை முன்வைக்காத வகையில் இண்டியா கூட்டணியை ஒருங்கிணைத்து வழிநடத்துவதே ராகுல் காந்தியின் முன்னுள்ள மிகப் பெரிய கடமையும் சவாலும் ஆகும்.