📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 08, 2026 02:34 AM

‘ராமாயணா’ படத்துக்கு ஆஸ்கர் கிடைக்காவிட்டால் ஏமாற்றமடைவேன்

‘ராமாயணா’ படத்துக்கு ஆஸ்கர் கிடைக்காவிட்டால் ஏமாற்றமடைவேன்

மும்பை: நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் ஆஸ்கர் விருதை வெல்லாவிட்டால் தான் மிகவும் ஏமாற்றமடைவதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மும்பையில் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோ தொடக்க விழாவில் இன்று (ஆகஸ்ட் 6) கலந்துகொண்டு பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "ராமாயணா திரைப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்காவிட்டால், அகாடமி விருதுகளின் நடுவர் குழுவைக் கண்டு நான் மிகவும் ஏமாற்றமடைவேன்.

இது இந்த தசாப்தத்தின் படம் மட்டுமல்ல, ஆயிரம் ஆண்டுகளுக்கான காவியத் திரைப்படம். நமது கலை, நாடகம் மற்றும் இசை ஆகியவை மிகவும் பழமையானவை. அந்தப் பழமையான கலை வடிவங்களை அதிநவீனத் தொழில்நுட்பத்தோடு இணைக்கவே நாங்கள் விரும்பினோம். அதைத்தான் நீங்கள் இங்கு செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் " என்று தெரிவித்தார்.

மேலும், மும்பை ஜியோ மையத்தில் நடைபெற்ற 'வேவ்ஸ் உச்சி மாநாடு 2025' நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து ‘ராமாயணா’ படத்துக்கான அரங்கத்தைப் பார்வையிட்டதை நினைவுகூர்ந்த அவர், அப்படத்தின் தரத்தைக் கண்டு தாம் வியந்துபோனதாகக் குறிப்பிட்டார்.

"புதிய தலைமுறைக்கு நமது வரலாற்றையும் கதைகளையும் கொண்டு சேர்க்க வேண்டிய சரியான பாதை இதுதான். நீங்கள் அமைத்து வரும் இந்த ஸ்டுடியோ உலகிலேயே மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், ரவி துபே ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளி சமயத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.