RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
அதிமுகவில் இருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி காலத்தில் இருந்தும் பலர் சென்றுள்ளார்கள். அரசியல் கட்சித் தலைவர்களை உற்பத்தி செய்கின்ற கட்சி அதிமுக என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல அரசு அதிகாரிகளுக்கு கூட முதலமைச்சர் விஜய் மேல் நம்பிக்கை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்.
தவெக அட்டூழியம் தாங்க முடியல
மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “தவெக ஆட்சிக்கு வந்து 2 மாதங்கள் தான் ஆகிறது. லஞ்ச ஒழிப்புத்துறையில் தலைமை பொறுப்புக்கு அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். 2 மாதம் கூட ஆகாத நிலையில் அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு மகேஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது யார் மேலேயும் விஜய்க்கு நம்பிக்கையில்லை. விஜய் மீதும் எந்த அதிகாரிகளுக்கும் நம்பிக்கை கிடையாது. தலைமைச்செயலாளர் தொடங்கி யாருக்கும் முதலமைச்சர் மேல் நம்பிக்கை இருக்கிறதா என தெரியவில்லை. இப்படி ஒரு ஆட்சியைப் பார்த்ததில்லை. அதேசமயம் தமிழ்நாட்டு மக்களுக்கும் நம்பிக்கை கிடையாது. அதனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
இந்த ஆட்சி 5 வருடம் நிலைக்கும் என யாரும் நினைக்க வேண்டாம். 2029 நாடாளுமன்றத் தேர்தல் வருகின்றபோது ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கப் போகிறது. 3 வருடம் தான் தவெக அரசின் ஆயுள் காலம் இருக்கும் எனவும் நினைக்க வேண்டாம். தவெகவுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிற திமுகவின் தோழமை கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் அந்த ஆதரவை விலக்கினாலும் ஆட்சி கவிழ்ந்து விடும். அது ஆண்டவனுக்கு தான் தெரியும். தவெக அட்டூழியம் தாங்க முடியவில்லை. விஜய், தனக்கு நண்பராக யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு அரசுப்பணியைத் தாரை வார்க்கிறார்” என தெரிவித்தார்.
விஜய் அதிமுகவில் சேர்ந்திருக்கலாம்
தொடர்ந்து பேசிய ஆர்.பி.உதயகுமார், “அதிமுகவில் இருந்து சில பேர் எதிர்பார்ப்புடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றிருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும் என்பது என் விருப்பமாகும். ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால் அதிமுக உங்களை தாயுள்ளதோடு அரவணைக்கும் என சென்றவர்களுக்கு சொல்லிக் கொள்ள நினைக்கிறேன். உங்களின் எதிர்பார்ப்பு நியாயம் தான். ஆனால் தவெகவில் அதனை எதிர்பார்ப்பது தான் ஏமாற்றத்தைக் கொடுக்கும்.
அதிமுகவில் இருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி காலத்தில் இருந்தும் பலர் சென்றுள்ளார்கள். எம்ஜிஆர் கட்சி தொடங்கும்போது ஜாதகம் பார்த்தாரா என தெரியவில்லை. ஆனால் அரசியல் கட்சித் தலைவர்களை உற்பத்தி செய்கின்ற கட்சி அதிமுக என சொன்னார்கள். ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. பாஜக 22 மாநிலங்களில் ஆளும் தேசிய கட்சியாகும். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் தலைவராக ஒரு காலத்தில் இருந்த திருநாவுக்கரசு, திமுகவில் 12 அமைச்சர்களாக இருந்தவர்கள், தவெகவில் செங்கோட்டையன், நிர்மல்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் எல்லாரும் அதிமுகவில் இருந்தவர்கள் தான். ஆனால் எத்தனை பேர் சென்றாலும் அதிமுகவின் கிளைக்கழகச் செயலாளர்கள் கட்சியைக் கட்டிக் காப்பார்கள்.
பதவிக்கு வந்த பிறகு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்கள். அதே பதவிக்கு வந்த பிறகு பண்ணையார்களாக மாறி விடுகிறார்கள். தவெக அரசின் 2 மாத கால ஆட்சியில் விஜய்க்கு என்ன பேராசை இருக்கிறது என தெரியவில்லை. திமுகவில் ஒரு எம்.எல்.ஏ.வை கூட கட்சியில் சேர்க்கவில்லை. குதிரைப்பேரம் பண்ணவில்லை. கட்சிக்கு அழைக்கவில்லை. அதிமுகவில் இருந்து சாரை சாரையாக வருகிறார்கள் என சொல்கிறார்கள். எனக்கு வயிறு எரிகிறது.
இதையும் படிங்க: உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
இரட்டை இலையில் வெற்றி பெற்றவர்களை விஜய் கட்சியில் ராஜினாமா செய்து விட்டு வந்தால் பதவி தருகிறேன் என சொல்கிறீர்களே.. அதிமுகவை அபகரிப்பதற்கு பேராசை பிடித்தவராக இருக்கும் விஜய் அவர்களே, அதிமுகவில் நீங்கள் தலைவராக நினைத்தால் ஜெயலலிதா காலத்தில் இணைந்திருக்கலாம். இபிஎஸ் காலத்தில் சேர்ந்திருக்கலாம். இந்த கட்சி யாரை வேண்டுமானாலும் தலைவராக அடையாளம் காட்டும். அப்படி காட்டுபவர்களை தொண்டர்கள் இதயத்தில் தாங்கிக் கொள்வார்கள்” என தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி