📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 20, 2026 11:02 AM

ரீல்ஸ் போட்டு ரீல் விடும் த.வெ.க., அரசு: பழனிசாமி பாய்ச்சல்

ரீல்ஸ் போட்டு ரீல் விடும் த.வெ.க., அரசு: பழனிசாமி பாய்ச்சல்

சென்னை: ''தமிழகத்தில் 'ரீல்ஸ்' வெளியிட்டு 'ரீல்' விடும் அரசு தான் நடந்து கொண்டு இருக்கிறது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சித்தார்.

சவுதி அரேபியா கடல் பகுதியில், ஈரான் கடல் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில், தமிழக மீனவர் உயிரிழந்தார். இதுகுறித்து பேச வேண்டுமென, அ.தி.மு.க., தரப்பில், சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் தரப்பட்டது.

சபாநாயகர் அதை நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதன் பின் பழனிசாமி அளித்த பேட்டி: சட்டசபை விதி எண் 55ன் கீழ், அ.தி.மு.க., சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து, ஐந்து நாட்கள் ஆகின்றன. சவுதியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 4 பேர், கடந்த 12ம் தேதி கடலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது, ஈரானிய கடல் கொள்ளையர்கள் தாக்கியதில், மாவீரன், 38, என்பவர் இறந்தார். மூன்று பேர் பலத்த காயங்களுடன், சவுதி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

கொல்லப்பட்டவரின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வரவும், காயமுற்றவர்களை மீட்டு உரிய சிகிச்சை அளிக்கவும், அவர்களின் குடும்பத்திற்கு உதவவும், அரசின் கவனத்தை ஈர்க்க கோரி, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம்.

தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு குரல் கொடுப்பது தான், அரசின் கடமையாக முந்தைய காலங்களில் இருந்தது. இந்த அரசு, 'தமிழகத்தை காப்போம்' என, பேச்சளவில் தான் பேசுகிறது.

ஆனால் தமிழர்களையும், வெளிநாடு வாழ் தமிழர்களையும் பாதுகாக்கவில்லை. இதற்கு பதில் சொல்ல அரசு அச்சப்படுகிறது.

தற்போது உள்ள அரசு, 'ரீல்ஸ்' வெளியிட்டு 'ரீல்' விடும் அரசாக நடந்து கொண்டிருக்கிறது. உயிரிழந்த மீனவர் குடும்பத்தின் மனநிலையை அரசு உணராமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு, அவர் கூறினார்.