ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணிக்கு வருவார்.. ரசிகர்கள் கொண்டாட்டம்.. ஆனால் நடக்கப் போவதோ வேறு!
ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணிக்கு வருவார்.. ரசிகர்கள் கொண்டாட்டம்.. ஆனால் நடக்கப் போவதோ வேறு!
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட், தற்போது அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் அந்த அணியில் இருந்து முழுமையாக விடுவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அவர் விடுவிக்கப்பட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போதே எழுந்துள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு வீரருக்கு வழங்கப்பட்ட மிக அதிகபட்ச தொகை இதுவாகும். இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேப்டனாகப் பொறுப்பேற்ற ரிஷப் பண்ட், 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு சீசன்களிலும் லக்னோ அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்லத் தவறினார். குறிப்பாக, 2026 சீசனில் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துப் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
அணியின் தோல்வி ஒருபுறமிருக்க, தனிப்பட்ட முறையிலும் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் செயல்படவில்லை. இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியையும் அவர் இழந்தார். இத்தகைய சூழலில் தான், அவர் லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனை அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. வரும் 2027 ஐபிஎல் தொடருக்கு முன்பாக ரிஷப் பண்ட் ஏலத்திற்கு வர அதிக வாய்ப்புள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது இடத்தைப் பிடிக்கவே கடந்த ஆண்டு சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியது. சஞ்சு சாம்சன் தற்போது அந்த அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த நிலையில், ரிஷப் பண்ட்டும் சிஎஸ்கே-வுக்கு வந்தால் அந்த அணியின் நட்சத்திர அந்தஸ்து உயரும் என ஒரு தரப்பு ரசிகர்கள் விரும்புகின்றனர்.
ஆனால், கிரிக்கெட் விமர்சகர்கள் இதில் மாற்றுக் கருத்தைக் கொண்டுள்ளனர். ஏற்கனவே சஞ்சு சாம்சன் என்ற தரமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இருக்கும்போது, மற்றொரு விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்டை சிஎஸ்கே தேர்வு செய்ய வாய்ப்பில்லை என அவர்கள் கூறுகின்றனர். அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருந்தால், அது பிளேயிங் 11-இல் ஆல்ரவுண்டர்களைச் சேர்ப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என்பது அவர்களின் வாதமாக உள்ளது. எனவே, ரிஷப் பண்ட் அடுத்த ஐபிஎல் ஏலத்திற்கு முன் தனது பேட்டிங் திறனை மீண்டும் வலுப்படுத்தினால் மட்டுமே மற்ற அணிகள் அவரை போட்டி போட்டு வாங்க முன்வரும்.