ரந்திர் சிங் காலமானார்: இந்திய விளையாட்டு அரங்கில் சோகம்
புதுடில்லி: முன்னாள் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரும், விளையாட்டு நிர்வாகியுமான ரந்திர் சிங் காலமானார்.
முன்னாள் இந்திய துப்பாக்கி சுடுதல் ('டிராப்') வீரர் ரந்திர் சிங் 79. இளம் வயதில் கிரிக்கெட் வீரராக விரும்பிய இவரது பார்வை, துப்பாக்கி சுடுதல் போட்டி மீது திரும்பியது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு (1964) மாற்று வீரராக தேர்வான இவர், அதன்பின் வரிசையாக 5 ஒலிம்பிக்கில் (1968, 1972, 1976, 1980, 1984) விளையாடினார். ஆசிய விளையாட்டில் (1978, பாங்காக், தாய்லாந்து) தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்த ரந்திர் சிங், டில்லியில் நடந்த ஆசிய விளையாட்டில் (1982) வெள்ளி வென்றிருந்தார். கடைசியாக 1994ல் ஜப்பானின் ஹிரோசிமாவில் நடந்த ஆசிய விளையாடில் விளையாடினார்.
கடந்த 1984ல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.,) இணை செயலரான ரந்திர் சிங், விளையாட்டு அமைப்பின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தினார். ஐ.ஓ.ஏ., பொது செயலராக (1987-2012) பணியாற்றிய இவர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.,) உறுப்பினராக (2001-2014) இருந்தார். கடந்த 2024ல் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (ஓ.சி.ஏ.,) தலைவராக 4 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்ட இவர், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இப்பதவியில் இருந்து பாதியில் விலகினார்.
வயது முதிர்வால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட ரந்திர் சிங், நேற்று டில்லியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவருக்கு வினிதா சிங் என்ற மனைவியும், மஹிமா, சுனைனா, ராஜேஷ்வரி குமாரி என்ற 3 மகள்களும் உள்ளனர். இதில், துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான ராஜேஷ்வரி 2022ல் நடந்த ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்றிருந்தார். தவிர இவர், ஆசிய சாம்பியன்ஷிப் (2016) போட்டியில் தங்கம் கைப்பற்றினார்.
அபினவ் இரங்கல்
ரந்திர் சிங் மறைவுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தவிர, பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட முன்னாள், இந்நாள் விளையாட்டு நட்சத்திரங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.