ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பதவி.. பாகிஸ்தான் வீரர்களுக்கு 'நோ'.. ஷதாப் கான் தேர்வு செய்த டி20 லிஸ்ட்
ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பதவி.. பாகிஸ்தான் வீரர்களுக்கு 'நோ'.. ஷதாப் கான் தேர்வு செய்த டி20 லிஸ்ட்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஷதாப் கான், பேட்டி ஒன்றில் உலகளவில் சிறந்த டி20 வீரர்களை தேர்வு செய்தார். அதில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருக்குக் கூட இடம் அளிக்காமல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை சிறந்த தொடக்க வீரராகவும், கேப்டனாகவும் தேர்வு செய்தார். இதை அடுத்து பாகிஸ்தானில் ஒரு சிறந்த டி20 வீரர் கூட இல்லையா? என்ற விவாதம் கிளம்பி உள்ளது.
'க்ரிக்விக்' ஊடக நிகழ்ச்சியில் சிறந்த டி20 வீரர்களை தேர்வு செய்யுமாறு ஷதாப் கானிடம் கேட்கப்பட்டது. அப்போது சிறந்த தொடக்க வீரராகவும் அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மாவைத் தேர்ந்தெடுத்தார். இந்திய அணிக்காக 171 டி20 போட்டிகளில் விளையாடி 5 சதங்கள், 32 அரைசதங்களுடன் 4,620 ரன்கள் குவித்துள்ள ரோஹித் சர்மா, இந்திய அணிக்கு 2024 டி20 உலகக்கோப்பையையும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளையும் வென்று கொடுத்து சர்வதேச அளவில் சிறந்த டி20 கேப்டனாகத் திகழ்கிறார்.
தொடர்ந்து விக்கெட் கீப்பராக தென்னாப்பிரிக்காவின் குவின்டன் டி காக்கையும் (106 போட்டிகளில் 2,584 ரன்கள்), சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக வெஸ்ட் இண்டீஸ்-இன் நிக்கோலஸ் பூரனையும் தேர்வு செய்துள்ளார். சிறந்த ஆல் ரவுண்டராக 746 டி20 போட்டிகளில் விளையாடி 14,800-க்கும் அதிகமான ரன்களும் 300-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளும் வீழ்த்திய கீரன் பொல்லார்ட்டை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
பந்துவீச்சுப் பிரிவில் அதிவேகப் பந்துவீச்சாளராக நியூசிலாந்தின் ஷேன் பாண்டையும், சுழற்பந்து வீச்சாளராக டி20 கிரிக்கெட்டில் 600-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் 4,500-க்கும் மேற்பட்ட ரன்களையும் குவித்துள்ள சுனில் நரைனையும் தேர்வு செய்துள்ளார். பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஷஹீன் அப்ரிதி போன்ற முன்னணி டி20 வீரர்கள் இருக்கும் நிலையில், தனது சொந்த நாட்டு வீரர்கள் யாரையும் சேர்க்காமல் ஷதாப் கான் வெளியிட்ட இந்த பட்டியல் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.