📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 22, 2026 08:34 AM

ரோகித் சர்மா சொன்ன விசயத்தை நான் நம்பவே இல்லை.. உண்மையை சொன்ன சஞ்சு சாம்சன்

ரோகித் சர்மா சொன்ன விசயத்தை நான் நம்பவே இல்லை..  உண்மையை சொன்ன சஞ்சு சாம்சன்

ரோகித் சர்மா சொன்ன விசயத்தை நான் நம்பவே இல்லை.. உண்மையை சொன்ன சஞ்சு சாம்சன்

மும்பை: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் ஆரம்பத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து, பின்னர் அதே தொடரின் நாயகன் விருது வென்றது வரையிலான சஞ்சு சாம்சனின் பயணம் பல ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக அமைந்தது. நியூசிலாந்து தொடருக்குப் பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த சரிவுகள் மற்றும் எழுச்சிகள் குறித்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் மனம் திறந்துள்ளார்.

இந்த கடினமான கட்டத்தில், "மனம் தளர வேண்டாம். இது ஒரு நீண்ட தொடர். வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்" என்று ரோஹித் சர்மா தன்னிடம் கூறியதாக சாம்சன் தெரிவித்தார். "உண்மையைச் சொல்வதானால், அப்போது நான் அவரது வார்த்தைகளை நம்பவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். அவர் தனது மனப்பூர்வமாக அல்லது அவரது அனுபவத்திலிருந்து பேசியிருக்கலாம்."

"ஆனால் அன்று அவரால் பார்க்க முடிந்ததை என்னால் பார்க்க முடியவில்லை. எனது முகத்திலேயே அது தெரிந்திருக்கும், அன்று நான் சற்று சோர்வாக இருந்தேன். நியூசிலாந்து தொடர் முடிந்த இரண்டு நாட்களிலேயே எங்கள் உலகக் கோப்பை பயணம் தொடங்கியது, அதிலிருந்து மீள எனக்கு குறைந்தது ஒரு வாரம் தேவைப்பட்டது" என்று சாம்சன் தெரிவித்தார்.

"விஷயங்களை எனக்குள்ளேயே மூடி வைக்க எனக்குப் பிடிக்காது, அதனால் நான் நூறு சதவீதம் மனநிறைவோடு இல்லை என்றால் அது என் முகத்தில் தெரிந்துவிடும். என்னை மீண்டும் சீரமைத்துக் கொள்வதற்கு முன்பு, நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நான் அந்த கடினமான மனநிலையில் இருந்தேன். நாம் தோல்வியடைந்துவிட்டோம் என்று தெரிந்தபிறகு, அடுத்து என்ன? நீங்கள் மிகக் கீழே இருக்கும்போது, அங்கிருந்து மேலே மட்டுமே செல்ல முடியும்" என்றும் அவர் கூறினார்.

"நான் என் மீது மனரீதியாக வேலை செய்யத் தொடங்கினேன். நான் ஏன் கிரிக்கெட் விளையாடுகிறேன்? எனது நோக்கம் என்ன? என்ற கேள்விகளை என்னிடமே கேட்கத் தொடங்கினேன். உலகக் கோப்பை நடந்து கொண்டிருக்கும்போதே என்னை நானே மீண்டும் கண்டறிவது போல் இருந்தது. அதன் பிறகு எல்லாம் பழையபடி சரியாக அமைந்தது" என்று அவர் விவரித்தார்.

தொடரின் தொடக்கத்தில் ஃபார்ம் அவுட் காரணமாக பிளேயிங் லெவனில் இடம் பெறாத சாம்சன், பின்னர் தனது திறமையால் அணிக்குள் நுழைந்து, இந்தியாவின் முன்னணி ரன் குவித்தவராகவும், ஒட்டுமொத்தமாக இத்தொடரில் அதிக ரன் குவித்தவர்களில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.அவர் வெறும் 5 இன்னிங்ஸ்களில் 80.25 என்ற சிறப்பான சராசரியிலும், 199.37 என்ற அதிரடி ஸ்டிரைக் ரேட்டிலும் 321 ரன்களைக் குவித்தார். மேலும், அவர் அடித்த 24 சிக்ஸர்கள், ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு பேட்டரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற புதிய சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.