📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 28, 2026 08:00 AM

ஷாங்காய் மாநாட்டில் புடினை சந்திக்கிறார் பிரதமர் மோடி

ஷாங்காய் மாநாட்டில் புடினை சந்திக்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.

ஐரோப்பியா மற்றும் ஆசிய நாடுகளின் பொருளாதாரம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்தும் நோக்கில், எஸ்.சி.ஓ., எனப்படும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில், இந்தியாவும் உறுப்பு நாடாக அங்கம் வகிக்கிறது.

இந்த அமைப்பின் 26வது உச்சி மாநாடு, மேற்காசிய நாடான கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் அடுத்த மாதம் 1ம் தேதி நடக்கிறது.

இதில் பங்கேற்க வரும்படி, கிர்கிஸ்தான் அதிபர் ஷதிர் ஜபரோ விடுத்த அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி வரும் 31, செப்., 1 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக அந்நாட்டிற்கு செல்ல உள்ளார்.

இதுகுறித்து நம் வெளியுறவு செயலர் சிபி ஜார்ஜ் கூறியதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26வது உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, மற்ற நாடுகளின் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச உள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து எடுத்துரைக்கப்படும்.

வரும் 31ம் தேதி, இந்த மாநாட்டின் வரவேற்பு மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, செப்., 1ல் நடக்க உள்ள மாநாட்டு அமர்வில் உரை நிகழ்த்த உள்ளார்.

இதுதவிர, எஸ்.சி.ஓ., உறுப்பு நாடுகளின் பிற தலைவர்களுடன் இணைந்து, பிஷ்கெக்கில் நடக்க உள்ள ஆறாவது உலக நோமத் விளையாட்டுப் போட்டித் தொடரின் துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

கிர்கிஸ்தான் செல்லும் முன், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி வரும் 29 மற்றும் 30ல் அந்நாட்டுக்கு செல்ல உள்ளார். இவ்வாறு அவர் கூறி னார்.