📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 30, 2026 12:34 PM

Spider-Man: Brand New Day

Spider-Man: Brand New Day

வாஷிங்டன்: மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் வரும் நாளை (ஜூலை 30) இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நடிகர் டாம் ஹாலண்ட் மீண்டும் ஸ்பைடர்மேனாக இதில் களமிறங்குகிறார். ‘ஷாங்-சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ்’ திரைப்படத்தை இயக்கி டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

2021-இல் வெளியான ‘நோ வே ஹோம்’ திரைப்படத்தின் முடிவில், மல்டிவர்ஸ் ஆபத்தைத் தவிர்க்கும் பொருட்டு, டாகர் ஸ்ட்ரேஞ்சின் மந்திரத்தின் மூலம் உலகம் முழுவதும் பீட்டர் பார்கர் / ஸ்பைடர்மேன் பற்றிய நினைவுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இதனால் அவரது நண்பர்களான எம்.ஜே மற்றும் நெட் ஆகியோரும் கூட அவரை முற்றிலுமாக மறந்துவிட்டனர். ஆன்ட் மே மற்றும் டோனி ஸ்டார்க் இல்லாத சூழலில், வழிகாட்டிகளோ குடும்பத்தினரின் ஆதரவோ இன்றி பீட்டர் பார்கர் முற்றிலும் தனித்து விடப்பட்டுள்ளார்.

தற்போது அவரே தயாரித்த புதிய ஸ்பைடர்மேன் ஆடையை அணிந்து, நியூயார்க் நகரில் குற்றங்களைத் தடுக்கும் ‘நெய்பர்ஹுட் ஸ்பைடர்மேனாக’ செயல்பட்டு வருகிறார். தனது பழைய நண்பர்கள் தங்களை மறந்து புதிய வாழ்க்கையை வாழ்வதைப் பார்த்து மனவேதனை அடைந்தாலும், அவரால அவர்களின் வாழ்க்கையில் மீண்டும் நுழைய முடியவில்லை. மேலும், எம்.ஜே தனது வாழ்க்கையில் புதிய ஒருவரைத் தேர்ந்தெடுத்துள்ளதாக டிரெய்லரில் காட்டப்படும் காட்சிகள், பீட்டர் பார்கரின் தனிமையை மேலும் அதிகமாக்குகின்றன.

இப்படத்தில் பீட்டர் பார்கருக்கு எதிராக பல ஆபத்தான எதிரிகள் அணிதிரள்கின்றனர். 2017-இல் வெளியான ‘ஸ்பைடர்மேன்: ஹோம்கமிங்’ திரைப்படத்தில் அறிமுகமான மேக் கார்கன் கதாபாத்திரம், இம்முறை ‘ஸ்கார்பியன்’ என்ற சக்திவாய்ந்த காமிக்ஸ் வில்லனாக மீண்டும் வருகிறது. ஸ்பைடர்மேனால் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கத் துடிக்கும் கார்கனுடன், காமிக்ஸ்களில் புகழ்பெற்ற ஆபத்தான குற்ற அமைப்பான ‘தி ஹேண்ட்’ மற்றும் ‘டாரன்டுலா’ ஆகிய புதிய அச்சுறுத்தல்களும் இணைகின்றன.

சவால்கள் நிறைந்த இப்போராட்டத்தில் பீட்டர் பார்கருடன் சில பழைய கதாபாத்திரங்களும் இணைகின்றன. குற்றவாளிகளைக் கொல்வதைக் கொள்கையாகக் கொண்ட ‘தி பனிஷர்’ கதாபாத்திரத்தில் ஜான் பெர்ன்தால் மீண்டும் நடிக்கிறார். ஸ்பைடர்மேனுக்கும் பனிஷருக்கும் இடையிலான மோதல்கள் படத்தில் முக்கியக் காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், ‘ஹல்க் / புரூஸ் பேனர்’ கதாபாத்திரத்தில் மார்க் ரஃப்பலோ மீண்டும் வருகிறார். அவரும் ஸ்பைடர்மேனும் மோதிக் கொள்ளும் காட்சி ட்ரெய்லரிலேயே பெரும் எதிர்பார்ப்பை தூண்டி விட்டன. இதனிடையே, ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ தொடரின் மூலம் புகழ்பெற்ற சேடி சின்க் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். எனினும் அதனை மார்வெல் இன்னும் ரகசியமாகவே வைத்திருக்கிறது. அவர் புகழ்பெற்ற ‘ஜீன் கிரே’ என்ற எக்ஸ் மென் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

தன் நண்பர்கள் தன்னை மறந்து விட்டதால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தத்தின் காரணமாக, பீட்டர் பார்கரின் உடலில் சில மாற்றங்கள் நிகழத் தொடங்குகின்றன. மனித டி.என்.ஏ-வை மீறி சிலந்தி டி.என்.ஏ ஆதிக்கம் செலுத்துவதால், அவரது உடலிலிருந்து நேரடியாகச் சிலந்தி வலைகள் உருவாவது, புலன்கள் சீர்குலைவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. காமிக்ஸ்களில் காட்டப்படும் பயங்கரமான ‘மேன்-ஸ்பைடர்’ நிலைக்கு அவர் மாறக்கூடும் என்ற தியரிகளையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர்.

முந்தைய பாகங்களை விட மிகவும் இருண்ட, உணர்வுபூர்வமான கதைக் களத்துடன் உருவாகியுள்ள இத்திரைப்படம், நாளை (ஜூலை 30) இந்தியாவிலும், நாளை மறுநாள் (ஜூலை 31 )உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.