SRH vs RR: எனக்கு இப்படியா நடக்கணும்? உறைந்து போன வைபவ் சூர்யவன்ஷி.. உலக சாதனை நழுவியது
SRH vs RR: எனக்கு இப்படியா நடக்கணும்? உறைந்து போன வைபவ் சூர்யவன்ஷி.. உலக சாதனை நழுவியது
சண்டிகர்: 2026 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து புதிய சரித்திரம் படைத்தார். கிறிஸ் கெயிலின் அதிவேக சத சாதனையை முறியடிக்கும் பொன்னான வாய்ப்பை வெறும் 3 ரன்களில் தவறவிட்டு அவர் ஆட்டமிழந்தது ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு, 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி அதிரடி தொடக்கம் அளித்தார். ஆரம்பம் முதலே சிக்ஸர் மழை பொழிந்தார். வெறும் 16 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டிய அவர், 28 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்தார். கிறிஸ் கெயில் படைத்த 30 பந்து சத சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் ஒரு பந்து மீதமிருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக 29-வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தான் ஆட்டமிழந்ததை நம்ப முடியாமல் வைபவ் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். மைதானத்தை விட்டு வெளியேறும்போது மிகுந்த ஏமாற்றத்துடன் மெதுவாக நகர்ந்து சென்றார். அவரது அபார ஆட்டத்தைப் பாராட்டும் விதமாக, எதிரணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள் ஓடி வந்து அவரை தட்டிக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த இன்னிங்ஸில் 12 சிக்ஸர்களை விளாசிய வைபவ், ஒரு ஐபிஎல் சீசனில் 3 முறை 10-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த ஒரே வீரர் என்ற மாபெரும் உலக சாதனையைப் படைத்துள்ளார். மேலும், இந்த சீசனில் இதுவரை 680 ரன்கள் குவித்துள்ள வைபவ், சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு வீரர் (Uncapped Player) ஒரே ஐபிஎல் தொடரில் எடுத்த அதிகபட்ச ரன்கள் என்ற புதிய சாதனையைத் தன்வசமாக்கினார். இதற்கு முன் 2023-ல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
வைபவின் இந்த அசுர ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி 15 ஓவர்களிலேயே 200 ரன்களைக் கடந்து மலைக்க வைத்தது. சதத்தைத் தவறவிட்டாலும், இந்த 15 வயது சிறுவனின் துணிச்சலான ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியது.