டாக்சிக் ப்ரோமோஷனில் ஜனநாயகன் பற்றி பேச்சு.. விஜய் பற்றி ஓபனாக சொன்ன யஷ்
சென்னை: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் டாக்சிக். இப்படமானது நாளை திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. அதனையொட்டி படக்குழு பறந்து பறந்து ப்ரோமோஷனில் ஈடுபட்டுவருகிறது. அந்தவகையில் நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியிலும் யஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். படத்தின் மீது ஒட்டுமொத்த இந்தியாவிலும் பலரிடம் பலமான எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கன்னட சினிமாவில் பல வருடங்களாக இருப்பவர் யஷ். ஏகப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் சரியான வெற்றி கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்தார். அந்தச் சூழலில்தான் கேஜிஎஃப் திரைப்படத்தில் நடித்தார். அது மிகப்பெரிய ஹிட்டானது. அந்த வெற்றிக்கு பிறகு கேஜிஎஃப் 2 படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.அப்போதிருந்து அவர் பான் இந்தியா ஸ்டாராக மாறிவிட்டார். கர்நாடகா மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அவருக்கான ரசிகர்கள் அதிகரித்தார்கள்.
யஷ்ஷின் டாக்சிக்: அவர் இப்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். யஷ் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் என்பதால் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு பலரிடமும் எழுந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பேர் ரிலீஸாகியிருக்க வேண்டிய படம்; சில காரணங்களால் தள்ளிப்போனது. ஒருவழியாக நாளை தியேட்டர்களில் ரிலீஸாகிறது. மொத்தம் 12,000 தியேட்டர்களில் அப்படம் ரிலீஸாகவிருப்பதாகவும் தகவல் ஓடுகிறது.
ப்ரோமோஷன் பணிகள் தீவிரம்: படத்தின் ட்ரெய்லரை பார்த்து, பெண்களை இழிவாக காட்சிப்படுத்திவிட்டார்கள் என்று சிலர் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். அதற்கு உரிய விளக்கத்தையும் யஷ் கொடுத்துவிட்டார். ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் படக்குழுவினர் பல மாநிலங்களுக்கு சென்று ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். எப்போது ப்ரோமோஷனுக்கு வெளியே வராத நயன்கூட இந்தப் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க நேற்று சென்னையில் டாக்சிக் ப்ரோமோஷன் விழா கோலாகலமாக நடைபெற்றது.
யஷ் பேச்சு: இதில், யஷ், கீது மோகன்தாஸ், கியாரா அத்வானி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய யஷ், "தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே எனக்கு நிறைய நிறைய அன்பைத்தான் கொடுத்துவருகிறார்கள். கேஜிஎஃப் படத்தில் நான் நடித்தபோது எனக்கு மிகப்பெரிய அன்பு கிடைத்தது. என்னை அன்புடன் வரவேற்றார்கள். தமிழ்நாடு மக்களுக்கு ஹேட்ஸ் ஆஃப். ஜனநாயகன் திரைப்படம் லீக்கானபோது அது என்னுடைய தயாரிப்பாளருக்கு வேதனையான விஷயமாக இருந்தது.
நிபந்தனையற்ற அன்பு: ஆனால் நீங்கள் காட்டிய அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத, நிபந்தனையற்ற அன்பாகத்தான் இருந்தது. விஜய்க்கு நீங்கள் காட்டும் அன்பு அப்படிப்பட்டதுதான். நீங்கள் சினிமாவை நல்ல விதமாக அணுகுகிறீர்கள். டாக்சிக் திரைப்படம் Passion மற்றும் உணர்வுகளை அடிப்படையாக கொண்டது. இது முற்றிலும் வித்தியாசமான உலகத்தை காட்டும் திரைப்படம். இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். சினிமா என்றால் தமிழ், கன்னடம், தெலுங்கு என்று இல்லை. அது இந்திய சினிமா அவ்வளவுதான்" என்றார். அவரது இந்தப் பேச்சு சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. முன்னதாக, விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ஜனநாயகன் சில மாதங்களுக்கு முன்பு முழு படமும் இணையத்தில் லீக்காகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.