டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு திட்டம்?
டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு திட்டம்?
டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க வழிவகை செய்யும் புதிய சட்டத்திருத்த மசோதா, விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published : July 29, 2026 at 10:32 PM IST
சென்னை:டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், அறுதிப் பெரும்பான்மை இல்லாததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
இதைத்தொடர்ந்து கடந்த மே 10 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பதவியேற்றார். அதே நாளில் 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், பின்னர் மூன்று கட்டங்களாக அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டது. அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதன் மூலம் தமிழகத்தில் தற்போது முழுமையான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையில் துறைவாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் குறித்து இதில் விரிவான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையைப் பொறுத்தவரை, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் மீது நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் இந்த விவகாரத்தை தவெக தலைவர் விஜய் முக்கியமாக முன்வைத்திருந்தார்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகும் பல இடங்களில் எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நடைமுறையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, இ.எஸ்.ஐ. உள்ளிட்ட நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவது தொடர்பான புகார்களும் நீடித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், டாஸ்மாக் கடைகளை அரசே நேரடியாக நடத்துவது மக்களிடையே அவப்பெயரை அரசுக்கு ஏற்படுத்துவதாக உள்ளதால் டாஸ்மார்க் கடைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வரவும் அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான சட்டத்திருத்த மசோதா, விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "அரசு எந்த கொள்கை முடிவை எடுத்தாலும் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம். ஆனால் பல ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். தனியார்மயமாக்கல் நடைமுறைக்கு வந்தால், எங்களுக்கு மாற்றுத் துறைகளில் அரசு பணி வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.