📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu November 27, 2026 09:32 AM

டாஸ்மாக் கடைகளுக்கான உரிமம் மேலும் ஓராண்டுக்கு புதுப்பிப்பு

டாஸ்மாக் கடைகளுக்கான உரிமம் மேலும் ஓராண்டுக்கு புதுப்பிப்பு

டாஸ்மாக் கடைகளுக்கான உரிமம் மேலும் ஓராண்டுக்கு புதுப்பிப்பு

டாஸ்மாக் கடையை ஒட்டியோ அல்லது அதிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள்ளோ மட்டுமே பார் அமைக்க வேண்டும் என டாஸ்மாக் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Published : November 26, 2026 at 9:27 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்வதற்கான உரிமத்தை மேலும் ஓராண்டுக்கு புதுப்பிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களை நிர்வகிப்பதற்கான விதிகளில் தமிழ்நாடு அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு அரசிதழ் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர், டாஸ்மாக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த FL-1 உரிமத்தை நவம்பர் 29,2026 முதல் நவம்பர் 28, 2027 வரை மேலும் ஓராண்டுக்கு புதுப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

பார்களை ஏலம் மூலம் தனியாருக்கு வழங்க அனுமதி

இதற்கான அறிவுறுத்தல்களை டாஸ்மாக் மேலாண் இயக்குநர், அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ளார். புதிய விதிகளின்படி, டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களை ஏலம் மூலம் தனியார் தரப்பினருக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏலத்திற்கான குறைந்தபட்ச தொகை மற்றும் நிபந்தனைகளை டாஸ்மாக் நிர்வாகக் குழு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரின் முன் அனுமதியுடன் முடிவு செய்யலாம். ஏலத்தில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Form-II-B உரிமம் வழங்கப்படும். ஏலத்தொகையை அரசுக்கு செலுத்துவதுடன், அதில் ஒரு சதவீதத்தை டாஸ்மாக் நிறுவனம் நிர்வாகக் கட்டணமாக வைத்துக்கொள்ளலாம்.

டாஸ்மாக் கடையை ஒட்டியோ அல்லது அதிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள்ளோ மட்டுமே பார் அமைக்க வேண்டும். பார்களின் இடத்தை மாற்றுவதற்கும், புதிய பார் திறப்பதற்கும் டாஸ்மாக் மேலாண் இயக்குநரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் தினமும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விற்பனை மற்றும் மதுபானப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணிக்கு பிறகு பார்களில் யாரும் இருக்கக்கூடாது

இரவு 10 மணிக்குப் பிறகு பார்களில் யாரும் இருக்கக் கூடாது. 21 வயது நிறைவடையாத நபர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. அவர்கள் பார்களுக்குள் நுழையவும், மதுபானம் அருந்தவும் அனுமதி இல்லை. 21 வயதுக்குக் குறைவானவர்களை கடைகள் மற்றும் பார்களில் பணியமர்த்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு டாஸ்மாக் கடையின் முன்பும் தமிழில் பெயர்ப்பலகை அமைத்து, கடை எண், உரிமம் தொடர்பான விவரங்கள் மற்றும் வெவ்வேறு அளவிலான மதுபான பாட்டில்களின் விலையைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மேலும், மது அருந்துதல் உடல்நலத்திற்குக் கேடு, பாதுகாப்பாக இருப்பீர் – மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்ற எச்சரிக்கை வாசகங்களையும் பெயர்ப்பலகையில் தடித்த எழுத்துகளில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

டாஸ்மாக் கடைகளுக்கான விடுமுறை நாட்கள்

திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்தநாள், வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட வேண்டும். அரசு மற்றும் அதிகாரிகள் உத்தரவிடும் பிற நாட்களிலும் மூட வேண்டும்.

ஒவ்வொரு கடையிலும் தினசரி மதுபான விற்பனை தொடர்பான கணக்குகள் மின்னணு முறையில் பராமரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கடை மற்றும் பாரிலும் ஆய்வுப் பதிவேடு (Inspection Book) கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும். கலால் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கடைகள், பார்களில் ஆய்வு மேற்கொண்டு, கணக்குகள், இருப்புகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து சோதனை செய்யலாம்.

இந்த புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் புதுப்பிக்கப்பட்ட உரிமங்களை நவம்பர் 29-ஆம் தேதிக்கு முன்பாக வழங்கி, விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.