📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion May 27, 2026 07:32 PM

ஆன்மீகக் கதை: திரௌபதியின் தாயுள்ளம்! | Tamil Spiritual Story

ஆன்மீகக் கதை: திரௌபதியின் தாயுள்ளம்! | Tamil Spiritual Story

தனக்கு நேர்ந்த அவமானத்திற்காக மிகப்பெரிய போரை நடத்திக் காட்டியவள் திரௌபதி என்று நாம் அறிவோம். அதேநேரம் எதிரியையும் மன்னித்து உயிர்ப்பிச்சை அளித்த, கருணையும் தாய்மையும் கொண்ட திரௌபதியின் மறுமுகத்தை அறிந்துக் கொள்வோம்!

மகாபாரதப் போர் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான யுத்தமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த யுத்தம் பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கும்.

மகாபாரதப் போர் இறுதி கட்டத்தை எட்டி மிகவும் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த போரின் போது கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. கௌரவர்களின் பக்கம் பிதாமகர் பீஷ்மர் முன்பே போர்க்களத்தில் உயிர் துறந்துவிட்டார், கௌரவர்களுக்கு வெற்றியை தேடி தரும் வீரனாக கருதப்பட்ட மாவீரன் கர்ணனும் போர்க்களத்தில் இருந்து விண்ணுலகம் எய்திவிட்டான். இறுதியாக போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தது துரியோதனனும், குலகுரு துரோணாச்சாரியாரின் மகனுமான அஸ்வத்தாமனும் தான்.

போர்க்களத்தில் மிகவும் தீர்க்கமாக போரிட்டுக் கொண்டிருந்த துரோணாச்சாரியாரை வீழ்த்துவது மிகவும் கடினமான செயலாக இருந்தது. ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி பாண்டவர்களில் மூத்தவனான யுதிர்ஷ்டிரன் "அஸ்வத்தாமன் என்ற யானை உயிரிழந்தது" என்று துரோணாச்சாரிடம் கூற, யானை என்ற சொல் வரும் போது, கிருஷ்ணர் சங்கொலி எழுப்பினார். தன்மகன் அஸ்வத்தாமன் தான் இறந்து விட்டான், என்று கேட்ட துரோணர் தன்னுயிரை விட தீர்மானிக்க, கிருஷ்ணர் நினைத்தது நடந்தது.

அதேநேரம் போர்க்களத்தில் துரியோதனன் தன் உயிரை இழக்கும் தருவாயில், அஸ்வத்தாமனை தனது படைக்கு தளபதியாக நியமித்தான். அப்போது அஸ்வத்தாமனிடம் துரியோதனன் ஒரு வேண்டுகோளை வைத்தான். அது பாண்டவர்களின் தலையினை கொண்டு வர வேண்டும் என்பதுதான். அத்துடன் அஸ்வத்தாமன் தன் தந்தை சூழ்ச்சியினால் கொல்லப்பட்டதை அறிந்தான். துரியோதனனுக்காக பாண்டவர்களை பழிவாங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வம்சத்தையும் வேரறுக்க முடிவு செய்தான்.

அன்றைய இரவு, அஸ்வத்தாமன் பாண்டவர்களின் போர் முகாமுக்கு வருகிறான். அந்த முகாமில் பாண்டவர்கள் தங்கும் குடிலில் ஐவர் தூங்குவதை கண்டு, அஸ்வத்தாமன் அந்தக் குடிலுக்கு தீ வைத்து எரிக்கிறான். ஆனால், இந்த இடத்தில் உறங்கிக் கொண்டிருந்தது பாண்டவர்கள் அல்ல, அவர்கள் உப பாண்டவர்கள் என்று அழைக்கப்படும் திரௌபதியின் புதல்வர்கள்.

தன் புதல்வர்கள் அழிந்ததைக் கண்டு திரௌபதி மிகவும் துயரம் அடைந்தாள்.

உப பாண்டவர்களை கொன்றது மட்டுமல்லாமல் அஸ்வத்தாமன், உத்திரையின் கருவில் இருக்கும் அபிமன்யுவின் வாரிசை அழிக்க பிரம்மாஸ்திரத்தையும் ஏவினான். இதைக் கண்டு மிகக் கோபமடைந்த அர்ஜூனன் போர்க்களத்திலிருந்து அஸ்வத்தாமனை சிறைப்பிடித்து இழுத்து வந்து திரௌபதியின் முன்னால் நிறுத்தினான். அப்போது பாண்டவர்களும் மற்றவர்களும் திரௌபதி, அஸ்வத்வாமனுக்கு மரண தண்டனை கொடுக்கச் செய்வாள் என்று எதிர்பார்த்தனர்.

திரௌபதியோ மிகவும் சோகத்துடன், பாண்டவர்களைப் பார்த்து, "ஒரு தாய் தனது புதல்வர்களை இழந்த வலி எவ்வளவு கொடியது என்பதை நான் இன்று அனுபவித்து வருகிறேன். என் வலி எப்போதும் போகாது, இந்த துயரம் கொடியது. இன்று தான் அஸ்வத்தாமனின் தாய், தன் கணவனை இழந்திருக்கிறாள். அந்த கவலையே அவளுக்கு போதும், புத்திரனை இழந்த பெரும் சோகம் அவளுக்கு வேண்டாம்" இவனை உயிருடன் விட்டு விடுங்கள் என்று கூறினாள்.

திரௌபதியின் தாய்மை உணர்வையும், மனிதாபிமானத்தையும் உணர்ந்த பாண்டவர்கள் மற்றவர்களும் அவளை போற்றினார்கள். என்னதான் திரௌபதி மன்னித்தாலும், கருவில் உள்ள குழந்தையை அழிக்க நினைத்த அஸ்வத்தாமனின் அந்த குரூர எண்ணத்திற்கு கிருஷ்ணர் சரியான தண்டனை கொடுக்க எண்ணினார். அதன்படி அவனுக்கு சாகாவரத்தை கிருஷ்ணர் கொடுத்தார். அது வரம் என்றாலும் பெரிய சாபமாகவும் இருக்கும்படி செய்தார்.

அஸ்வத்தாமனின் நெற்றியில் இருந்த மணியை பிடுங்கி அதை ஆறாத ரணமாக்கினார். அவன் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு அது ஆறாமல் இருந்து வலியின் துன்பத்தினை எப்போதும் அனுபவிக்க வேண்டும் என்று சாபமிட்டார். அதோடு யாருமில்லாத தனிமையான வாழ்க்கையும் வாழவேண்டும் என்ற சாபத்தையும் கொடுத்தார்.