📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 21, 2026 07:33 PM

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``தவெக மீது சேறு வாரி இறைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்"

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``தவெக மீது சேறு வாரி இறைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்"

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``தவெக மீது சேறு வாரி இறைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்" - தவெக

நீட் தேர்வு கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதாக தவெக தெரிவித்திருக்கிறது.

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்தப் போராட்டத்தைக் கலைக்கும் வகையில் ஆளும் பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு, தடியடி தாக்குதல் எனக் வன்முறை சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறது.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதய நிதி ஸ்டாலின், எம்.பி.கனிமொழி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், டெல்லியில் போராட்டத்தில் இருக்கும் தமிழ்நாட்டின் மாணவர்கள் வீடியோ மூலம் முதல்வர் விஜய் இது தொடர்பாக மௌனமாக இருப்பது ஏன் என்ற கேள்விகளையும் எழுப்பியிருந்தனர். இந்த நிலையில், தவெக-வின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவு ஒன்று வெளியாகியிருக்கிறது.

அதில், ``நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாக கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார். மற்றவர் உழைப்புக்கும் மற்றவர் சிந்தனைக்கும் மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

ஆனால் இந்தப் பதிவில் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் தொடர்பாக அரசின் நிலைபாடு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.