📅 Saturday, 20 June 2026 IST | ஆனி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 20, 2026 07:41 PM

டெல்லியில் முதல் மகளிர் காவல் நிலையம் திறப்பு

டெல்லியில் முதல் மகளிர் காவல் நிலையம் திறப்பு

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் முதல் மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

நகரின் வடக்குப் பகுதியிலுள்ள சப்ஜி மண்டியில் அமைந்துள்ள அந்தக் காவல் நிலையத்தை டெல்லியின் துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் திறந்து வைத்தார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க டெல்லியில் 16 உதவி மையங்கள் செயல்படுகின்றன. பெண்கள் மட்டுமே பணியில் இருக்கும் ‘பிசிஆர்’ எனும் ரோந்து வாகனங்கள் டெல்லியின் பல்வேறு பகுதிககளையும் சுற்றி வருகின்றன.

எனினும், பெண்களுக்கு எனத் தனியாக மகளிர் காவல் நிலையம் டெல்லியில் இப்போதுதான் முதன்முறையாகத் துவக்கப்பட்டுள்ளது.

“பெண்களுக்கு எதிரான தீவிரமான குற்றங்களைத் தடுப்பது, விசாரிப்பது, தீர்வு காண்பது ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்த இந்தக் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது,” என்று திரு தரன்ஜித் சிங் தெரிவித்தார்.

“டெல்லி முழுவதும் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் சனிக்கிழமை முதல் மக்கள் குறைகேட்புத் திட்டம் தொடங்கப்படும். பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதும் அவர்களுக்கு எதிரான குற்றங்களைச் சிறப்பாகக் கையாள்வதும் இத்திட்டத்தின் நோக்கம்,” என அவர் கூறினார்.

மகளிர் காவல் நிலையத் திறப்பு நிகழ்ச்சியில் டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சாவும் கலந்து கொண்டார்.

“டெல்லி நகரப் பெண்கள் தங்கள் பிரச்சினைகளை நேரடியாகக் காவல்துறையிடம் தெரிவித்துத் தீர்வு காண்பதற்கு இந்தக் காவல் நிலையம் ஒரு சிறந்த தளமாக அமையும். முழுமையாகப் பெண் பணியாளர்களைக் கொண்ட டெல்லியின் முதல் காவல் நிலையமாக இது செயல்படும். இதேபோன்ற வசதிகள் விரைவில் மற்ற மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்படும்,” என்று சதீஷ் கோல்ச்சா கூறினார்.

இந்தியாவின் முதல் மகளிர் காவல் நிலையம் கேரளாவின் கோழிக்கோட்டில் 1973ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. அதன்பின்னர் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால்1992ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.