த.வெ.க., அரசு பட்டாசு தொழிலை முடக்குகிறது: தி.மு.க., 'மாஜி' புகார்
சிவகாசி: பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, தி.மு.க., விருதுநகர் வடக்கு மாவட்டம் சார்பில், சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பங்கேற்று தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: ஒரு விபத்தை காரணம் காட்டி ஒட்டுமொத்த பட்டாசு தொழிலையும் ஒரேயடியாக முடக்கி, நசுக்குவது எந்த வகையில் நியாயம்?
விதிகளை பின்பற்றாத ஆலைகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதை யாரும் தடுக்கப் போவதில்லை. சட்டவிரோதமாக பட்டாசு தொழில் செய்பவர்கள் மீது, அரசு கட்டாயம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், முறையாக உரிமம் பெற்று இயங்கும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு என்ற பெயரில், தொழிலை முடக்குவது எந்த வகையில் நியாயம்?
இதனால் பட்டாசு விற்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். தொழில் பாதிக்கப்படுகிறதே என்ற கவலை, த.வெ.க., அரசுக்கு இருக்கிறதா என கேள்வி எழுகிறது.
தி.மு.க., ஆட்சியில் சிவகாசியில் பல உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. த.வெ.க., அரசின் பட்ஜெட்டில், பட்டாசு தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என, எங்காவது கூறியிருக்கிறார்களா?
ஆயிரக்கணக்கான குடும்பத்தினரின் வாழ்வாதாரமான பட்டாசு தொழில் இன்று பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து என்ன செய்வோம் என்ற கேள்வியோடு அந்த குடும்பங்கள் தவிக்கின்றன.
இந்த நிலையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சி பொறுப்பேற்ற மூன்று மாத காலத்திலேயே த.வெ.க., அரசு தோல்வியை சந்தித்துள்ளது இவ்வாறு அவர் பேசினார்.