📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 17, 2026 10:03 AM

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தந்த உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டும் நடவடிக்கை பாராட்டுக்குரியது: கி.வீரமணி

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தந்த உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டும் நடவடிக்கை பாராட்டுக்குரியது: கி.வீரமணி

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தந்த உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டும் நடவடிக்கை பாராட்டுக்குரியது: கி.வீரமணி

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தந்த உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டும் நடவடிக்கை பாராட்டுக்குரியது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். ஆளுநரின் நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தரும் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் எனவும் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; "தமிழ் மொழி வாழ்த்துக்கு முதலிடம் தந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டும் நடவடிக்கைக்குப் பாராட்டுகள்!

ஆளுநர் நிகழ்ச்சிகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்!

சென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும், பிற நீதிமன்றங்களிலும் ஆகஸ்ட் 15 (இந்திய ‘சுதந்திர நாள்’) விழாவின்போது, நடைபெறும் கொடியேற்று நிகழ்ச்சியில், முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என்றும், தேசியக் கொடி ஏற்றிய பின்னர் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் ஆகியவற்றுக்குத் தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுநிதி ஆகஸ்ட் 14 அன்று சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். இந்தத் தகவல் செய்திகளில் வெளியாகி சர்ச்சையானது.

ஆனால் அன்று மாலையே, அதை மாற்றி, தமிழ் மொழி வாழ்த்து முதலில் பாடப்படும் என்று புதிய சுற்றறிக்கை வெளிவந்ததுடன், நேற்று (15.8.2026) காலை நடந்த நிகழ்ச்சியில், முதலில் தமிழ் மொழி வாழ்த்து பாடப்பட்டு, நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

உயர்நீதிமன்றத்துக்குப் பாராட்டு!

தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அங்கீகரித்து வெளியிடப்பட்டிருந்த முந்தைய அரசாணையைப் பின்பற்றியும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படியும், தமிழ்மொழி வாழ்த்துக்குரிய மரியாதையை வழங்கி நிகழ்வை மாற்றி அமைத்து நடத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நமது பாராட்டுகள்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டும் நடவடிக்கைக்காக, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்பமை எஸ்.ஏ.தர்மாதிகாரி அவர்களுக்கும், அனைத்து நீதிபதிகளுக்கும், மற்ற பொறுப்பாளர்களுக்கும் நமது பாராட்டுகள்!

மேலும், உயர்நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி, தமிழ்நாடு ஆளுநர் மாளிகையிலும், ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.