📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news July 30, 2026 05:34 AM

தாஜ்மகாலுக்கு வந்த கொரிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

தாஜ்மகாலுக்கு வந்த கொரிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

உத்ரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக புகழ்பெற்ற தாஜ்மகால் வளாகத்தில், தென் கொரிய நாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை குரங்கு கடித்து குதறிய சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ரத்த வெள்ளத்தில் வெளிநாட்டுப் பெண் துடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

ஆசை ஆசையாய் வந்த கொரிய பெண்

தென் கொரிய நாட்டை சேர்ந்த 25 வயதான கிம் என்ற இளம் பெண், தனது ஆண் நண்பருடன் இந்தியாவில் உள்ள வரலாற்று சின்னங்களை சுற்றி பார்க்க வந்துள்ளார். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை ஆசை ஆசையாய் பார்க்க வேண்டும் என்ற கனவோடு, காலை 7 மணிக்கே தம்பதியினர் தாஜ்மகால் வளாகத்திற்குள் நுழைந்தனர்.

குரங்கு தாக்குதல்

தாஜ்மகாலின் கிழக்கு நுழைவாயில் அருகே, வெளிநாட்டு பயணிகளுக்கு வழங்கப்படும் இலவச காலணி உறைகளை வாங்குவதற்காக கிம் நண்பர் கவுண்டருக்கு சென்றுள்ளார். அப்போது படிக்கட்டு அருகே கிம் மெஹ் தனியாக நின்று கொண்டிருந்தார்.அந்த நேரத்தில், அங்கு சுற்றி திரிந்த குரங்கு ஒன்று, திடீரென பாய்ந்து வந்து கிம் மெஹ்-ன் வலது கையை பயங்கரமாக கடித்து குதறியது.

குரங்கு கடித்த வேகத்தில், அந்த பெண்ணின் கையில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. வலியால் துடித்த அவர், "நாம் எங்கே செல்வது? என்று அழுதுகொண்டே அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டு அலறினார். அங்கிருந்த சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்புப் படையினரும், தொல்லியல் துறை ஊழியர்களும் ஓடிவந்து, அவரை மீட்டு வளாகத்தில் உள்ள முதலுதவி மையத்திற்கு அழைத்து சென்றனர்.

வராத ஆம்புலன்ஸ்

உடனடியாக அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், ஒரு மணி நேரமாகியும் அரசு ஆம்புலன்ஸ் வரவில்லை! ரத்தக்கசிவு அதிகமாகி கொண்டே இருந்ததால், அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்தனர். அங்கிருந்த பேட்டரி கார் மூலம், ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த பெண் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாதியிலேயே ரத்து

தாஜ்மகாலை முழுமையாக பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு வந்த அந்த வெளிநாட்டு தம்பதியினர், இந்த கொடூர சம்பவத்தால் நிலைகுலைந்து போய், பாதியிலேயே தங்களது இந்திய பயணத்தை ரத்து செய்துவிட்டு சொந்த நாட்டுக்கு ஏமாற்றத்துடன் திரும்பினர். தாஜ்மகால் வளாகத்தில் குரங்கு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சுற்றுலா பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.