தாய்மொழியும் தலைமுறையும்: சிங்கப்பூரில் தமிழின் எதிர்காலம்
மாணவர்களிடையே தாய்மொழிகளின் வேர்களை மேலும் வலுப்படுத்துவதற்காகப் பல புதிய வழிமுறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. தமிழ் மொழியை உயர்நிலையில் கற்பிக்கும் பாடத்திட்டமும் விரிவாக்கப்படுகிறது. இப்பாடத்திட்டத்தைக் கற்பிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது.
இந்நாட்டில் தமிழ் மொழி உள்ளிட்ட தாய்மொழிகள், மேலும் சிறந்தோங்க சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடந்த தாய்மொழிகளின் கருத்தரங்கில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறிவித்த நற்செய்தி இது.
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் 75ஆம் ஆண்டு நிகழ்வில் ஆற்றிய உரையில், தமிழ் வாழும் மொழியாகத் தொடர்ந்து செழித்தோங்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அளித்த வாக்குறுதி, சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தில் வெகுவாக எதிரொலித்துள்ளது.
பிரதமர், அமைச்சரின் வாக்குமூலங்களின் வழி, தாய்மொழி தழைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தை நாம் துல்லியமாக உணரலாம்.
சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு நம் பல இன, பல மொழி அடையாளங்கள் மேலும் வலுச் சேர்ப்பவை. அதை அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது. அதனால், அந்த அடையாளங்களைத் தலைமுறைகள் தாண்டி போற்றிப் பேணுவதற்கான சட்டதிட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து உருவாக்குகிறது. அவற்றைச் செயல்படுத்தும் நடைமுறைகளை செவ்வனே வகுக்கிறது. வசதிகளையும் வாய்ப்புகளையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
தமிழ் மொழியைப் பாதுகாத்து வளர்க்கக்கூடிய உத்திகளையும் அதற்கான வளங்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசாங்கம் முனைப்பாய் இருக்கும் இத்தருணத்தில், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளச் சமூகம் ஆயத்தமாய் இருக்க வேண்டும்.
வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் தமிழை இயல்பாகப் பயன்படுத்தும் சூழலை உருவாக்கவேண்டும்.
தாய்மொழி கற்றல் என்பது பள்ளித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு மட்டும் எனச் சுருங்கிவிடாமல், மேடைகளிலும் அன்றாட வாழ்விலும் இயல்பாகப் புழங்கும் வாழும் மொழியாகத் திகழ வேண்டும்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
பெற்றோர் இல்லங்களில் தமிழ்ப் புழக்கத்தை வளர்ப்பதோடு, கலைஞர்களும் ஊடகங்களும் சமகாலத் தன்மையைச் சேர்த்து தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு மேலும் மின்னிலக்கக் கருவிகளைத் தாய்மொழிக் கற்றலுக்கு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும். நம் மொழியை நாம் பாதுகாத்தால், நம் அடையாளத்தை மொழி காக்கும்.
தாய்மொழியில் தேர்ச்சியை இழப்பது சொற்களை மறந்துபோவதுடன் நிற்பதில்லை. அது தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்பைப் பாதிக்கின்றது. தாய்மொழியை இழக்கும்போது குடும்ப அமைப்பில் நுட்பமான பிளவுகள் ஏற்படுகின்றன. மூத்த தலைமுறையினருடன் உரையாடும் வாய்ப்புக் குறையும்போது, அவர்களின் வாழ்வியல் கதைகளை, குடும்ப வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் பாலத்தை நாம் இழக்கிறோம்.
தாய்மொழியை இழப்பவர்கள் தங்கள் சொந்தச் சமூகத்திலும் முழுமையாகப் பொருந்த முடியாமல், வெறு மொழி பேசும் சமுதாயத்திலும் ஏற்றுக்கொள்ளப்படாமல், நடுவில் சிக்கிக்கொள்கின்றனர்.
ஒரு மொழியின் இலக்கியத்தில் பொதிந்திருக்கும் உள்ளடக்கம், வரலாற்று, பண்பாட்டுக் குறியீடுகள் ஆகியவற்றை ஒருபோதும் மொழிபெயர்ப்புகளின் வழி நாம் முழுமையாக அடைய முடியாது.
மொழியை இழப்பது என்பது நமது பாரம்பரியத்தின் திறவுகோலை இழப்பதற்குச் சமமாகும்.
இந்தச் சவால்களுக்கு நடுவே, சிங்கப்பூரில் ஒரு புதிய நம்பிக்கைக் கீற்று தென்படுகிறது.
வகுப்பறைத் தேவைகளைத் தாண்டி, உயர்தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத்தைப் பாடமாகத் தேர்ந்தெடுத்துப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பள்ளிகளில் மொழிக் கற்றல் முறைகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், தமிழ்மொழி விழா மேலும் இளையர்களின் நவீனக் கலைப் பங்களிப்புகள் ஆகியவை தமிழுக்கு ஒரு புதிய ஊக்கத்தை அளித்துள்ளன.
ஆங்கிலத்தில் புலமை பெறும் அதே வேளையில் தமிழின் ஆழமான பண்பாட்டுத் தொடர்பைத் தக்கவைத்துக்கொள்ளும் இருமொழித் திறனை வளர்த்தெடுப்பதே, நமது அடையாளத்தையும் பண்பாட்டுச் செழுமையையும் எதிர்காலத்திற்கு முழுமையாகக் கொண்டுசெல்லும் சிறந்த வழியாகும்.