தேனை தடவி தேர்தல் வாக்குறுதி.. இப்போ ஏமாற்று வேலை.. விஜயை விளாசிய தங்கம் தென்னரசு!
தேனை தடவி தேர்தல் வாக்குறுதி.. இப்போ ஏமாற்று வேலை.. விஜயை விளாசிய தங்கம் தென்னரசு!
மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும்போது மட்டும் எங்கே இருந்து திடுமெனக் குதித்து வருகின்றன? என தங்கம் தென்னரசு கேள்வியெழுப்பியுள்ளார்.
விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான தவெக அரசின் அறிவிப்பை முன்னாள் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக தேர்தல் வாக்குறுதியும்.. அறிவிப்பும்..
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் தவெக தேர்தல் வாக்குறுதியில் ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும்” என்றும் தெரிவித்திருந்தது.
இப்படியான நிலையில் கடந்த மே 25ம் தேதி பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதில், “அந்த வகையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டது. இப்படியாக 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு பல்வேறு மதிப்பீடுகளில் பயிர்க்கடன் தள்ளுபடி பற்றி தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. தேர்தலுக்கு முன், பின் மாறி மாறி பேசுவதாக முதலமைச்சர் விஜய் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனிடம் கேட்டபோது, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இந்த பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
Also Read: தேர்தலுக்கு முன் கடும் விமர்சனம்.. விஜயிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. மீசை ராஜேந்திரன் அதிரடி!
இந்த நிலையில் தவெக அரசின் பயிர்க்கடன் தொடர்பான அறிவிப்புக்கு முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது வாராத ரிசர்வ் வங்கி விதிமுறைகள், மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும்போது மட்டும் எங்கே இருந்து திடுமெனக் குதித்து வருகின்றன? இது நிர்வாகத் திறமையின்மையா? இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா?
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின்படி தான் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு நிதியமைச்சர் அண்மையில் விளக்கம் சொல்லியிருக்கிறார். கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளவாறு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் என்பது கடந்த வருடம் நவம்பர் 28ம் தேதியன்றே வழங்கப்பட்டுள்ளது.
அந்த வழிகாட்டுதலை முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர்தான் கடந்த ஏப்ரல் 26ம் தேதியன்று தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆகவே, தெளிவாகத் தெரிந்து கொண்டே வாக்குறுதியைத் தந்து, வாக்கு அறுவடை முடிந்ததும் இப்போது ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றுவதாகும்.
எனவே, தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிப்படி இந்த அரசின் முதல் நிதி நிலை அறிக்கையிலேயே விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பினை வெளியிட வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு வழங்கி அவர்களுக்கு நம்பிக்கையூட்டிவிட்டு, இப்போது அரைகுறையாக எந்த விவசாயிக்கும் பயனளிக்காத வகையில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பதாக சொல்வது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகமாகும்” என தவெக அரசை சரமாரியாக விளாசியுள்ளார்.