தேர்தல் தோல்வி எதிரொலி
தேர்தல் தோல்வி எதிரொலி - மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை திட்டம்?
திமுக அமைப்பு ரீதியிலாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இன்று (அல்லது) நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Published : August 14, 2026 at 2:59 PM IST
Updated : August 14, 2026 at 3:22 PM IST
By - பாண்டியராஜ்.ப
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த அக்கட்சித் தலைமை முடிவுச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற்ற முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான திமுக, தவெகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. தவெக & விஜய் மீதான நடிகர் பிம்பம் ஆகியவற்றைத் தாண்டி திமுகவின் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் நடவடிக்கைகளால் தொண்டர்களிடையேவும், பொதுமக்களிடமும் கடும் அதிருப்தியை சம்பாதித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து, தேர்தல் தோல்வி மற்றும் கட்சியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக திமுக தலைமை மறுசீரமைப்புக் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு, மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே தனித்தனியாக ஆலோசனைகளை நடத்தி, கருத்துகளை எழுத்துப்பூர்வமாகப் பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
திமுகவில் நிர்வாக ரீதியிலாக என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்? என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மறுசீரமைப்புக் குழு முதற்கட்ட அறிக்கையை வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லம் என இரண்டு முறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி திமுகவில் நிர்வாக ரீதியிலாக பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய கட்சியின் தலைவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், தேர்தலில் சுணக்கமாகப் பணியாற்றிய மற்றும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய திமுகவின் சிட்டிங் மாவட்டச் செயலாளர்கள் சுமார் 10 பேர் வரை நீக்கம் செய்ய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இளைஞர்கள், புதிய முகங்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கி 77- லிருந்து மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
அதன்படி, திமுக மறுசீரமைப்புக் குழு வழங்கிய முதற்கட்ட அறிக்கையின்படி, மாவட்டச் செயலாளர் மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளைக்குள் வெளியாகும் எனவும், அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாநில அளவிலான பொறுப்பும், மாற்று கட்சியில் இருந்து திமுக வந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பும் வழங்குவது குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் பொறுப்பில் பெண்களை நியமிக்கவும் கட்சித் தலைமை முடிவுச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுகவில் தற்போது மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 2 சட்டமன்றத் தொகுதி முதல் அதிகபட்சமாக 6 சட்டமன்றத் தொகுதி வரை கவனித்து வருகின்றனர். இதனை மாற்றி ஒரு மாவட்டச் செயலாளருக்கு இனி அதிகபட்சமாக 3 தொகுதிகள் வரை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படும் நிர்வாகிகளுக்கு மாநில அளவிலான பொறுப்புகள் அல்லது கட்சியின் பல்வேறு அணியின் மாநில பொறுப்புகள் வழங்கி எதிர்ப்பை சமாளிக்கவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, வரும் ஆகஸ்ட் 22- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.