📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 10, 2026 03:04 PM

“தேர்தலில் வென்றால் இபிஎஸ், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா?”

“தேர்தலில் வென்றால் இபிஎஸ், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா?”

சி.வி.சண்முகம்| கோப்புப்படம்

சென்னை: “தேர்தலில் வெற்றி பெற்றால் இபிஎஸ் காரணம், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா? முறையாக கூட்டணி அமைக்காதது; பிரிந்தவர்களை ஒன்றிணைக்காததுதான் அதிமுக தொல்விக்கு மிகப் பெரிய காரணம். சென்னையில் அதிமுக துடைத்தெறியப்பட்டுவிட்டது” என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேர்தலில் வெற்றி பெற்றால் இபிஎஸ் காரணம், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா? வலுவான தலைவர் வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தோம். சென்னையில் அதிமுக துடைத்தெறியப்பட்டுவிட்டது. பழனிசாமி பொறுப்பேற்ற பின் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல் என எதிலும் அவரால் வெல்ல முடியவில்லை.

தமிழகத்தில் தென் மாவட்டம், டெல்டா, சென்னையில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் விழுப்புரம் போன்ற வட மாவட்டத்தில் பாமகவால் அதிமுக வெற்றி பெற்றது. நாங்கள் தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என்று இபிஎஸ்ஸிடம் கேட்கிறோம்.

தோல்விக்குப் பொறுப்பேற்று பல தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார்கள். காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இபிஎஸ்தான் இன்றும் பொதுச் செயலாளர். நாங்கள் உங்களை ராஜினாமா செய்ய சொல்லவில்லை. திமுகவோடு கூட்டணி வைக்கவில்லை என்று இபிஎஸ் சொல்ல முடியுமா? நான் சத்தியம் செய்கிறேன். இதுவரை இந்த விஷயம் சம்பந்தமாக அவர் வாய் திறக்கவில்லை.

கூட்டத்தைக் கூட்டுங்கள். தேர்தல் தோல்விக்கான காரணம் என்ன என்று நான் சொல்கிறேன். பழனிசாமியின் சொந்த செல்வாக்கில்தான் 47 தொகுதிகளில் வென்றதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். 47 தொகுதிகளில் மட்டுமே அவருக்கு செல்வாக்கு என்றால், மற்ற தொகுதியில் அவருக்கு செல்வாக்கில்லை என்கிறாரா? சொந்த மாவட்டமான சேலத்தின் 7 தொகுதிகளில் ஏன் பழனிசாமிக்கு செல்வாக்கு இல்லை?

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் தென் மாவட்டம் பூஜ்ஜியம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் அதிமுக முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. வட மாவட்டங்களில் பாமக ஆதரவால் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

திருமாவளவனை முதல்வர் ஆக்க வேண்டும் என்று நான் சொன்னதாக சொல்கிறார்கள். ஆமாம், சொன்னேன். எந்தச் சூழலில் சொன்னேன் என்பதை பார்க்க வேண்டும்.

முறையாக கூட்டணி அமைக்காதது, பிரிந்தவர்களை ஒன்றிணைக்காதது அதிமுக தொல்விக்கு மிகப் பெரிய காரணம். இதை ஆராயாமல், காழ்ப்புணர்ச்சியால் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களே, உங்களுக்கு தைரியம், திராணி இருந்தால் எப்போது வேண்டுமானாலும் கூட்டத்தை கூட்டுங்கள். நாங்கள் வருகிறோம். தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கலாம்.

யார் அந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி? அவருக்கு பேச என்ன தகுதி இருக்கிறது? விவசாயத் துறை அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவால் சிறையில் அடைக்கப்பட்டவர்தான் இவர். அவர் எங்களுக்கு பாடம் எடுக்கிறார். அவருக்கு அந்தத் தகுதி இல்லை” என்றார் சி.வி.சண்முகம்