தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக மீண்டும் பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் முடிவு
- சிறப்பு நிருபர் -
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, மூன்றாவது முறையாக பார்லிமென்டில் மீண்டும் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர, 'இண்டி' கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உட்பட பல்வேறு விவகாரங்களில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு, பிற தேர்தல் கமிஷனர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததாக ஆங்கில தினசரி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
புதிய வாக்காளர்களை சேர்த்தல், பெயர்களை நீக்குதல், வாக்காளர்கள் தரவுதளத்தை அணுகுவது, புதிய வாக்காளர்களுக்கான படிவம் - 6ல் செய்யப்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, கடந்த 10 மாதங்களில், 14 முறை எதிர்ப்பு தெரிவித்ததாக அதில் கூறப்பட்டது.
இந்த விவகாரம், டில்லி அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை எழுப்பி வருகிறது. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஞானேஷ் குமாருக்கு எதிராக தீவிர நடவடிக்கையில் இறங்க, 'இண்டி' கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் திட்ட மிட்டுள்ளன. இது தொடர்பாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மூத்த எம்.பி.,க்கள் பலர், பார்லி., வளாக அரங்கில் கூடி நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன் அரசியலமைப்பு பதவியின் கண்ணியத்தை முற்றிலும் சீர்குலைத்துவிட்டதாக பலர் குற்றஞ்சாட்டினர்.
ஞானேஷ் குமாருக்கு எதிராக பார்லி.,யில் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர அவர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கான நோட்டீஸ், அனைத்து எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவுடன் சமர்ப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தனித்தனியாக அல்லாமல், அனைத்து எதிர்க்கட்சிகளும், ஒருங்கிணைந்து கூட்டு உத்தியுடன் செயல்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக, பார்லி., கூட்டத்தொடர் நடக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அடுத்த வாரத்துக்குள் இது சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்லி.,யில் கடந்த மார்ச் 12 மற்றும் ஏப்., 24 ஆகிய தேதிகளில், ஞானேஷ் குமாருக்கு எதிராக, இரண்டு பதவி நீக்க நோட்டீஸ்களை, எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்திருந்தன. துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர், முதல் தடவை சமர்ப்பிக்கப்பட்ட நோட்டீசிற்கு, ஒப்புதல் தராமல் நிராகரித்தனர். இரண்டாவதாக அளிக்கப்பட்ட மற்றொரு நோட்டீஸ் மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல், இன்னும் நிலுவையில் உள்ளது.
டில்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் நேற்று கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பா.ஜ., நீண்ட காலம் நம் நாட்டை ஆட்சி செய்யும் என, பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பல முறை கூறியுள்ளனர். அப்படியானால், தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிர்ப்பு அலையே இல்லையா? எந்தவொரு தலைவரும், இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பேன் என உரிமை கோர முடியாது. ஓட்டுரிமை அழிக்கப்பட்டால், சட்டத்திற்கோ அல்லது அரசியலமைப்பு அமைப்பு களுக்கோ, எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். நம் வாக்காளர்களின் ஓட்டுகள் திருடப்பட்டுள்ளன என்பதை முழு நாடும் இப்போது உணர்ந்து வருகிறது. இதை, பிரதமர் மோடி மற்றும் அவரை சுற்றியுள்ளவர்கள்தான் செய்தனர். ஓட்டு திருடப்பட்டிருந்தால், கொண்டுவரப்பட்ட அனைத்து சட்டங்களும் சட்டவிரோதமானவை. ஓட்டுகளைப் பாதுகாப்பது தேர்தல் கமிஷனின் பொறுப்பு. ஓட்டு பாதுகாப்பாக இல்லை என்றால் எதுவுமே பாதுகாப்பாக இருக்காது. ஞானேஷ் குமாரின் நடவடிக்கைக்கு, தேர்தல் கமிஷனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் தலைமையில் நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில், 100 சதவீதம் முறைகேடு செய்யப்பட்டுள்ளன. எனவே, தலைமை கமிஷனர் பதவியில் இருந்து ஞானேஷ் குமார் விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, ஞானேஷ் குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும்; பதவியில் இருந்து நீக்க வேண்டும்; அவரது பதவிக்காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் குறித்து சுதந்திரமான மறுஆய்வு நடத்தப்பட வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி, இன்று தேர்தல் கமிஷன் அலுவலகங்களை நோக்கி, மாநிலங்களில் போராட்ட ஊர்வலங்கள் நடத்த காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டு உள்ளது.