தெம்பனிஸ் செங்கல் வடிவமைப்புக்கு வண்ணம் பூசுவதை சிலர் விரும்பவில்லை
தெம்பனிஸ் வீவக குடியிருப்புப் பேட்டையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட செங்கல் முகப்புகளுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வண்ணம் பூசவில்லை.
தற்போது அப்பகுதிகளில் நீர்க்கசிவுச் சிக்கல்களைச் சரிசெய்வதற்காகப் பழுதுபார்ப்பு, வண்ணம் பூசும் பணிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன.
எனினும், இக்கட்டடங்களின் தனித்துவமான அடையாளம் அழிந்துவிடும் என்ற அச்சத்தில் இத்திட்டத்திற்குச் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நீர் கசிவுப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 45ல் உள்ள 497A முதல் D, 497F முதல் H மற்றும் 497J வரையிலான எட்டு புளாக்குகளில் வசிக்கும் மக்களிடம் மூன்று வண்ணத் திட்டங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதி முடிவடைகிறது.
முன்மொழியப்பட்டுள்ள மூன்று வண்ணங்களில் ஒன்று, கட்டடத்தின் அசல் வண்ணத்தை ஒத்திருக்கிறது. மற்றொன்று அசல் நிறத்துடன் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது, கட்டடங்களின் தோற்றத்தையே முற்றிலுமாக மாற்றியமைக்கும் வண்ணமாகும்.
‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளேட்டிடம் பேசிய சில குடியிருப்பாளர்கள், கட்டடங்களின் வண்ணத்தில் பெரிய மாற்றங்களை விரும்பவில்லை என்று கூறினர்.
அதே வேளையில் சில குடியிருப்பாளர்களும் கட்டடக் கலை நிபுணர்களும் செங்கல் முகப்பின்மீது வண்ணம் பூசும் நடவடிக்கையையே தீவிரமாக எதிர்த்துள்ளனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை பாதுகாப்புப் பேராசிரியர் இயோ காங் ஷுவா, “இவை, முறைப்படி பாரம்பரியக் கட்டடங்களாக அறிவிக்கப்படாமல் இருக்கலாம், அதற்காக அவற்றுக்கு மதிப்பில்லை என அர்த்தமாகாது,” என்றார்.
“இந்தப் புளோக்குகள் அவற்றின் செங்கல் வேலைப்பாடுகளினாலேயே மக்கள் எளிதில் அடையாளம் காணக்கூடியதாக மாறியுள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.
செப்டம்பர் 8ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த அறிக்கையில், இந்தப் புளாக்குகளில் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து குடியிருப்பாளர்களிடையே பல்வேறு கருத்துகள் இருப்பதாக தெம்பனிஸ் நகர மன்றம் தெரிவித்தது.
“சிலர் கூடுதல் வண்ணமயமான நிறங்களையும், செங்கல் தோற்றத்திலிருந்து மாறுபட்ட வடிவமைப்பையும் விரும்புகிறார்கள், மற்றவர்களோ இதன் தனித்துவமான அடையாளம், பாரம்பரிய மதிப்புக் காரணமாகச் செங்கல் முகப்புகள் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்று கருதுகிறார்கள்,” என்று அது கூறியது.
மேலும், 2017 முதல் 2019 வரையிலான பழுதுபார்ப்பு, வண்ணம் பூசும் நடவடிக்கையின்போது குடியிருப்பாளர்களின் கருத்தறிந்து நீர் கசிவால் பாதிக்கப்பட்ட சுவர்களின் பகுதிகளில் அசல் செங்கல் நிறத்தை ஒத்த வண்ணத்தைப் பூசியதாக நகர மன்றம் சொன்னது.
“இருப்பினும், அதன் பிறகு செங்கல் சுவர்கள் பழமையானதால், மேலும் ஏற்பட்ட நீர் கசிவு குடியிருப்பாளர்களின் வீடுகளைப் பாதித்துள்ளது,” என்று நகர மன்றம் குறிப்பிட்டது.