திலக் வர்மா மரண அடி.. வெறும் 42 பந்தில் செஞ்சுரி.. 14 ஃபோர், 8 சிக்ஸ்.. டிஜி20 தொடரில் மெகா சேஸிங்
திலக் வர்மா மரண அடி.. வெறும் 42 பந்தில் செஞ்சுரி.. 14 ஃபோர், 8 சிக்ஸ்.. டிஜி20 தொடரில் மெகா சேஸிங்
ஹைதராபாத்: சமீபத்தில் இலங்கை மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் இந்தியா ஏ அணியை வழிநடத்தி சாம்பியன் பட்டம் வென்ற திலக் வர்மா, தற்போது தெலங்கானாவில் நடைபெற்று வரும் டிஜி20 (TG20) தொடரில் வெறும் 56 பந்துகளில் 136 ரன்கள் குவித்து மிரட்டி இருக்கிறார். அவரது இந்த அபார சதத்தின் மூலம் மெடக் ஃபால்கன்ஸ் அணி 259 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக துரத்திப் பிடித்து திரில் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மெடக் ஃபால்கன்ஸ் மற்றும் வாரங்கல் வாரியர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வாரங்கல் வாரியர்ஸ் அணி, அதன் கேப்டன் அமன் ராவ் பெராலாவின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய அமன் ராவ் 48 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்சர்களுடன் 142 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் தனது சதத்தை வெறும் 32 பந்துகளில் எட்டினார்.
பின்னர் 259 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய மெடக் ஃபால்கன்ஸ் அணிக்கு திலக் வர்மா தூணாக நின்று அணியை வழிநடத்தினார். வெறும் 22 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 42 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். ஆட்டத்தின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற திலக் வர்மா 56 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 136 ரன்கள் குவித்தார். அவருக்குப் பக்கபலமாக அதிரடி காட்டிய விக்ரம் நாயக் 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து உதவினார்.
முன்னதாக, ஆட்டத்தின் 15வது ஓவரில் மெடக் அணி 190 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 65 ரன்கள் தேவைப்பட்ட கடினமான கட்டத்தில், திலக் வர்மா மற்றும் விக்ரம் நாயக் ஜோடி இணைந்து 58 ரன்கள் சேர்த்து வெற்றியை சாத்தியமாக்கியது. இறுதியில், மெடக் ஃபால்கன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில், 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் இமாலய இலக்கை எட்டி திரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தியா ஏ அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கையோடு, திலக் வர்மா விளையாடிய இந்த இன்னிங்ஸ் கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.