திமுக
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்று, நேற்று தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில், முந்தைய அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, பல்வேறு திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
அதன் விபரம்:
* அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித் தொகை திட்டம், 'அண்ணல் அம்பேத்கர் அயல் நாட்டுக் கல்வி உதவித் தொகை திட்டம்' என மாற்றப்பட்டு, அதற்கு, 131 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
* தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், 'வெற்றி தொழில் முனைவோர் திட்டம்' என மாற்றப்பட்டு, 75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
* நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், 'மண்ணின் மகள் திட்டம்' என, பெயர் மாற்றப்பட்டு, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது
* தொல்குடி திட்டம், 'ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம்' என மாற்றப்பட்டு, 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
* தமிழ்நாடு பனைப்பொருள் மேம்பாட்டு வாரியம், 'தமிழ்நாடு பனை மேம்பாட்டு கழகம்' என மாற்றப்பட்டுள்ளது
* அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, விலையில்லா ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டத்தின் பெயர், 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என, மாற்றப்பட்டுள்ளது
* அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட் டு, தி.மு.க., ஆட்சியில் கைவிடப்பட்ட, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், 'அண்ணனின் சீர்' என, பெயர் மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், திருமணத்திற்கு எட்டு கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும்
* தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்ட, முதல்வரின் காலை உணவு திட்டம், 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என மாற்றப்பட்டுள்ளது
* தமிழகத்தில் மாதிரி பள்ளிகள், உண்டு, உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், 'பெருந்தலைவர் காமராஜர் சிறப்பு பள்ளிகள்' திட்டத்தின் கீழ், உண்டு, உறைவிட பள்ளிகள் தொடங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது
* அ.தி.மு.க., ஆட்சியில், அம்மா மடிக்கணினி திட்டம், தி.மு.க., ஆட்சியில், உலகம் உங்கள் கையில் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்ட, கல்லுாரி மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம், 'வெற்றி மடிக்கணினி திட்டம்' என, பெயர் மாற்றப் பட்டுள்ளது.