📅 Tuesday, 28 July 2026 IST | ஆடி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 28, 2026 05:33 AM

திமுக

திமுக

திருநெல்வேலி: ''அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, சோபா கொடுத்து தங்கள் பக்கம் இழுக்கும் பணியில், த.வெ.க., அரசு ஈடுபட்டுள்ளது,'' என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றஞ்சாட்டினார்.

முதல்வர் விஜய் மீது அவதுாறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய வழக்கில், விளாத்திகுளம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனை, நேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சந்தித்தார்.

தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோருடன் நேற்று காலை 12:38 மணிக்கு சிறைக்கு வந்த உதயநிதி, அங்கு மார்க்கண்டேயனை சந்தித்து நலம் விசாரித்தார்.

தொடர்ந்து, மதியம் 1:05 மணியளவில் வெளியே வந்தார். பின், கே.டி.சி.நகரில் உள்ள ஹோட்டலில் செய்தியாளர்களை உதயநிதி சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: சிறையில் மார்க்கண்டேயன் தைரியமாக இருக்கிறார். அவரை, ஜாமினில் வெளியே கொண்டு வர சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழக வெற்றிக் கழக அரசு, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. அதைத்தவிர வேறு எந்த பணியையும் செய்யவில்லை.

துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் த.வெ.க., நிர்வாகிகள் மீது, அவர்களது கட்சியினரே பல்வேறு புகார்களை கூறி வருகின்றனர்.

அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை சோபா கொடுத்து, தங்கள் பக்கம் இழுக்கும் பணியை தான், 24 மணி நேரமும் த.வெ.க., அரசு செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், கடந்த 20ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் நேரு, ரகுபதி உள்ளிட்டோர் சந்தித்தனர். ஆனால், எம்.எல்.ஏ.,வாக இருக்கும் மார்க்கண்டேயனை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சந்திக்காமல் இருப்பது, தி.மு.க.,வினர் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்துவதாக, கடந்த 23ம் தேதி நம் நாளிதழில், செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, உதயநிதி நேற்று திருநெல்வேலி சிறைக்கு சென்று, மார்க்கண்டேயனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிறையில் 25 நிமிடங்கள் மட்டுமே உதயநிதி இருந்தார்.